×

ராமேஸ்வரம் கோயில் கருவறை படங்கள், வீடியோக்கள் வைரல் : ஆகம விதிகளை காக்க பக்தர்கள் கோரிக்கை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் கருவறையின் போட்டோ, வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் ஆகம விதிகளை காக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புண்ணிய ஸ்தலங்களில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மிக முக்கியமான ஒன்றாகும். இந்தியாவில் உள்ள நான்கு முக்கியத் திருத்தலங்களான துவாரகா, பூரி, பத்ரிநாத் ஆகியவற்றில் தெற்கே அமைந்த சிவத்தலம் ராமேஸ்வரம் மட்டுமே. அதேபோல் 12 ஜோதிர்லிங்க திருத்தலங்களில் வடக்கே 11ம், தெற்கே அமைந்துள்ள ராமேஸ்வரத்தில் தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமையுடைய காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாக ராமேஸ்வரம் விளங்குகிறது.

ஆகம விதிகளின்படி இக்கோயில் கருவறையில் வீற்றிருக்கும் மூலவர் சிவலிங்கத்தை போட்டோ, வீடியோ எடுக்க தடை உள்ளது. இதனால் ஓவியமாக வரையப்பட்ட மூலவரின் படங்களே கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஓவிய படத்தை இங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாங்கி செல்கின்றனர். மேலும் திருவிழா நாட்களில் நடைபெறும் சிறப்பு அலங்காரம் அபிஷேகங்களை கூட யாரும் பதிவு செய்ததில்லை. இந்நிலையில் கோயில் கருவறையில் வீற்றிருக்கும் லிங்கத்தின் போட்டோ வீடியோ பக்தர் ஒருவரால் சமீபத்தில் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஆகம வீதிகளை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர், அவரது இன்ஸ்டாகிராமில் கோயிலுக்குள் வருவதில் இருந்து சுவாமி தரிசனம் செய்தது வரை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். குறிப்பாக கருவறையுடன் மூலவரை ஜூம் செய்து காட்டிய வீடியோவும் பரவுகிறது. ஆன்மீக மரபுகளை மீறிய இந்த வீடியோவால் ஒட்டுமொத்த பக்தர்களின் மத நம்பிக்கை கேலி கூத்தாக்கி விட்டது என ஆன்மீக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூட இதுபோன்ற ஒரு சம்பவம் இங்கு நடைபெற்றது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் வாட்சப் தளத்தில் மூலவர் ராமநாத சுவாமியின் புகைப்படம் வெளியாகி அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கோயில் ஊழியர் ஒருவர் இதற்கு காரணம் என்று தெரியவந்தது. பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து கோயில் நிர்வாகத்தினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் செல்போன் பயன்படுத்துபவர்களை கண்காணித்து தடுக்க அதற்கென பணியாளர்களை ஈடுபடுத்துவதில்லை.

இதனால் கோயிலுக்குள் பக்தர்கள் எந்த தயக்கமுமின்றி செல்போன் கேமராக்களை கொண்டு செல்வதால் சமீபகாலமாக அடிக்கடி மூலவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோயில் நிர்வாகம் இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

The post ராமேஸ்வரம் கோயில் கருவறை படங்கள், வீடியோக்கள் வைரல் : ஆகம விதிகளை காக்க பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Rameshwaram ,Aghama ,Rameswaram Ramanathaswamy Temple ,Rameshwaram Temple ,
× RELATED தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு