×
Saravana Stores

வெவ்வெறு மதம் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு; காஷ்மீருக்கு விமானத்தில் பறந்து தம்பதியாக திரும்பிய காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

ஜோலார்பேட்டை: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி சென்னையில் இருந்து காஷ்மீருக்கு விமானத்தில் பறந்து சென்று அங்குள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து திரும்பிய நிலையில், பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சந்தைக்கோடியூர் பகுதியை சேர்ந்தவர் சுமையா பேகம்(22). இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். சந்தை கோடியூர், பாதர்கெசு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கத்தமிழன்(29). இவர் ஐடிஐ படித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே தெருவில் வசித்து வந்தபோது பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 5ம் தேதி சுமையாபேகம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து சுமையா பேகமின் தாய் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சுமையா பேகம், காதலன் தங்கத்தமிழன் ஆகியோர் திருமணம் செய்து கொண்டு தம்பதியாக நேற்று முன்தினம் பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்றுள்ளனர். பின்னர் விமானம் மூலம் டெல்லிக்கு சென்று அங்கிருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள நகர் பகுதிக்கு சென்று அங்கு உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

அதன் பிறகு போலீசார் தேடி வரும் விவரம் அறிந்து காதல் ஜோடி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்தடைந்து, அதன் பிறகு போலீசில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து அறிவுரை வழங்கினர். மேலும், இருவரும் மேஜர் என்பதால் காதலி தனது கணவருடன் செல்வதாக கூறியதன்பேரில் போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

The post வெவ்வெறு மதம் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு; காஷ்மீருக்கு விமானத்தில் பறந்து தம்பதியாக திரும்பிய காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Jollarpet ,Chennai ,Market Kodiyur ,Jolarpettai, Tirupathur district ,
× RELATED காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 2 பேர் பலி