திருச்சி: திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள், ரூ.15 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பிடிபட்ட ராமநாதபுரம் வாலிபரிடம் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி வழியாக செல்லும் ரயிலில் தங்கம், பணம் கடத்தப்படுவதை தடுப்பதற்காக ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே இருப்பு பாதை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அப்போது முகக்கவசம் அணிந்து வந்த ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், நுழைவாயிலில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த அவர்கள், அந்த பயணி வைத்திருந்த கருப்பு நிற தோள் பை மற்றும் நீல நிற பை ஆகியவற்றை சோதனை செய்தனர். அப்போது, கருப்பு நிற தோள் பையில் நகைகளும் மற்றும் நீல நிற பையில் கட்டுக்கட்டாக பணமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தகவல் அறிந்த திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் வந்து அந்த பயணியிடம் விசாரணை நடத்தினர். இதில், பிடிபட்டவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த லட்சுமணன் (34) என்பதும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்ததும், திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரைக்கு பஸ்சில் செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த பயணியிடம் இருந்து ரூ.15 லட்சம் ரொக்கம் (500 ரூபாய் கட்டுகள்) மற்றும் ரூ.1.89 கோடி மதிப்பிலான 2,796 கிராம் நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவலறிந்து வணிகவரித்துறை மற்றும் கலால்துறை அதிகாரிகள் வந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பணத்திற்கான ஆவணங்கள் குறித்து லட்சுமணனிடம் கேட்டறிந்தனர். அதற்குரிய ஆவணங்களை அவர் கொடுக்கவில்லை. இதனால் பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமா? என அவரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் ராமநாதபுரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வந்த லட்சுமணன், அந்த நகை கடையில் இருந்து வெளியேறி சொந்தமாக தொழில் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக உறவினர் ஒருவர் மூலமாக லட்சுமணன் நகைகளை செய்து விற்பனை செய்வதாகவும், போலியான பில் தயாரித்து விற்றதாகவும் கூறப்படுகிறது. மதுரை அல்லது எந்த ஊரில் உள்ள நகைக்கடைக்கு நகைகளை எடுத்து சென்றார் என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயிலில் கடத்திய ரூ.2 கோடி நகைகள் ரூ.15 லட்சம் ரொக்கம் பறிமுதல்: வாலிபரிடம் வருமானவரித்துறை விசாரணை appeared first on Dinakaran.