×
Saravana Stores

திரிபுராவில் அதிர்ச்சி சம்பவம்; போதை ஊசி பழக்கத்தால் 828 மாணவர்களுக்கு எய்ட்ஸ்: 47 பேர் பலியான கொடூரம்

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் போதை மருந்து ஊசியால் பள்ளி, கல்லூரியை சேர்ந்த 828 மாணவர்கள் எய்ட்ஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 47 பேர் பலியான அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் இருந்து வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அங்கு போதைப் பொருளுக்கு அடிமையான 828 மாணவர்கள் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஊசி மூலம் போதை மருந்தை உடலில் செலுத்திக் கொண்டவர்கள். ஒரே ஊசியை பலரும் பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டவர்கள். இதனால் ஒருவர் மூலம் மற்றவர்களுக்கு எய்ட்ஸ் நோய் பரவி உள்ளது.

இதில் உச்சகட்ட கொடூரம் பலரும் பள்ளி மாணவர்கள் என்பதுதான். 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரி, பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் போதை ஊசி மூலம் எய்ட்ஸ் நோயாளிகளாக மாறி உள்ளனர். இதுமட்டுமின்றி, 47 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். 572 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்க அதிகாரிகள் கூறுகையில், ‘‘செல்வந்தர்களின் வீட்டுப் பிள்ளைகளே பெரும்பாலும் இந்த நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள். அரசுப் பணியில் உயர் பொறுப்பில் இருக்கும் பெற்றோர்கள், செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகள் எது கேட்டாலும் பணத்தை கொடுத்திருக்கிறார்கள். அது இவ்வளவு பெரிய அபாயத்தில் கொண்டு வந்து விட்டுள்ளது. கடந்த 2007 முதல் மே 2024 வரையிலான காலகட்டத்தில் இந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 8,729 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5,674 பேர் உயிருடன் உள்ளனர். 4,570 பேர் ஆண்கள், 1,103 பேர் பெண்கள், திருநங்கை ஒருவர். பாதுகாப்பற்ற பாலியல் உறவால் மட்டுமல்ல, போதை ஊசியால் கூட எய்ட்ஸ் நோய் பரவும் என்பதை இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றனர்.

The post திரிபுராவில் அதிர்ச்சி சம்பவம்; போதை ஊசி பழக்கத்தால் 828 மாணவர்களுக்கு எய்ட்ஸ்: 47 பேர் பலியான கொடூரம் appeared first on Dinakaran.

Tags : incident ,Agartala ,Tripura ,northeastern ,
× RELATED ரஞ்சி ரவுண்டப்…