×

வாணியம்பாடி அருகே 8 ஆடுகளை கொன்ற சிறுத்தை: பீதியில் கிராம மக்கள்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே 8 ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் சிறுத்தை புகுந்தது. அங்கிருந்த சிலரை தாக்கிவிட்டு பதுங்கியது. பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்து கூண்டுக்குள் அடைத்து தமிழக-ஆந்திர வனப்பகுதியான வாணியம்பாடி அருகே உள்ள மாதகடப்பா மலைப்பகுதியில் சிறுத்தையை விட்டனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டு கிராமத்தில் உள்ள வனப்பகுதியை யொட்டி நிலத்தில் மேய்ந்துகொண்டிருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை வேட்டையாட முயன்றது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாட்டின் உரிமையாளர், தடியுடன் சென்று கன்றுக்குட்டியை மீட்டார். முன்னதாக மனித நடமாட்டம் கண்டதும் தப்பியோடிய சிறுத்தை, அங்குள்ள மலைப்பகுதிக்கு சென்று பாறை குழியில் பதுங்கியது.
இந்தநிலையில் வாணியம்பாடி அருகே கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 8 ஆடுகளை சிறுத்தை வேட்டையாடியுள்ளது.

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆடுகளை தங்கள் வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் அடைத்து வைத்திருந்தார். இன்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப கொட்டகைககு வந்து பார்த்தபோது அங்கு 8 ஆடுகள் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கொட்டகை அருகே சிறுத்தையின் கால் தடமும் காணப்பட்டது. நள்ளிரவில் கொட்டகைக்குள் புகுந்த சிறுத்தை, ஆடுகளை வேட்டையாடி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். சிறுத்தையின் கால் தடம் எனக்கூறப்படும் பதிவையும் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், `திருப்பத்தூரில் கடந்த மாதம் பிடிபட்ட சிறுத்தைதான் தற்போது தேவஸ்தானம் கிராமத்திற்குள் வந்து ஆடுகளை வேட்டையாடிவிட்டு சென்றுள்ளது. சிறுத்தையின் நடமாட்டத்தை மாதகடப்பாவை ஒட்டிய கிராம மக்கள் அடிக்கடி பார்ப்பதாக கூறுகின்றனர். எனவே சிறுத்தையை மீண்டும் கூண்டு வைத்து பிடித்து வேறு பகுதியில் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.

The post வாணியம்பாடி அருகே 8 ஆடுகளை கொன்ற சிறுத்தை: பீதியில் கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi ,Tirupattur ,
× RELATED வாணியம்பாடி காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!!