×

ஓராண்டு போராட்டம் முடிவுக்கு வந்தது டெல்லி எல்லையில் இருந்து விவசாயிகள் வீடு திரும்பினர்: இனிப்பு வழங்கி கொண்டாட்டம் கூடாரங்கள், தடுப்புகள் அகற்றம்

காஜிப்பூர்: வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றதை தொடர்ந்து, டெல்லி – உத்தர பிரதேச எல்லையில் தற்காலிக கூடாரங்களை காலி செய்து கொண்டு விவசாயிகள் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத்தும், விவசாயிகளும் 383 நாட்களுக்கு பிறகு வீட்டுக்கு புறப்பட்டனர். ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 40 விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பான, ‘பாரதிய கிசான் சங்கம்,’ டெல்லி எல்லையில் கடந்தாண்டு நவம்பரில் போராட்டத்தை தொடங்கியது. இதை முடிவுக்கு கொண்டு வர ஒன்றிய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. சிங்கு, காஜிப்பூர், திக்ரி ஆகிய எல்லைகளில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து விவசாயிகள் அங்கேயே நிரந்தரமாக தங்கி போராட்டம் நடத்தினர். ஓராண்டாக போராட்டம் நடந்த நிலையில், சர்ச்சைக்குரிய இந்த 3  வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால தொடரின் முதல் நாளே இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத வரையில் போராட்ட களத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று விவசாய சங்கங்கள் அறிவித்தன. இந்நிலையில், இந்த கோரிக்கைகளையும் ஏற்பதாக ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தது. இதையடுத்து, சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தங்கள் தற்காலிக கூடாரங்களை காலி செய்து கொண்டு சொந்த ஊர் திரும்ப தொடங்கினர். பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத், அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் 383 நாட்களுக்கு பிறகு டெல்லி – உத்தரபிரதேச எல்லையில் உள்ள காஜிப்பூரில் இருந்து வாகனங்களில் நேற்று வீடு திரும்பினர். அப்போது, வெற்றிக் கொண்டாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். பாடல்கள் பாடியும், நடனமாடியும் கொண்டாடியதால் காஜிப்பூர் எல்லை விழாக்கோலம் பூண்டது. இதைத் தொடர்ந்து, போராட்ட களத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டு வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டது. போலீசாரும் பாதுகாப்புக்காக போட்டிருந்த இரும்பு மற்றும் கான்கிரீட் தடுப்புகளை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் அகற்றி, லாரியில் எடுத்து சென்றனர். * பிரமாண்ட வரவேற்புபாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் திகைத்தும், அவரது ஆதரவாளர்களையும் வரவேற்கும் விதமாக மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான சிசோலி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும், அனைவருக்கும் வினியோகிக்க பெரிய அளவில் இனிப்புகள் தயாராக இருந்தது. சிசோலி கிராம மக்கள் திகைத்துக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்….

The post ஓராண்டு போராட்டம் முடிவுக்கு வந்தது டெல்லி எல்லையில் இருந்து விவசாயிகள் வீடு திரும்பினர்: இனிப்பு வழங்கி கொண்டாட்டம் கூடாரங்கள், தடுப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Delhi border ,Ghazipur ,Union government ,Delhi-Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED நேற்று மாலை முதல் எரிகிறது; டெல்லி...