×

7வது புத்தகத் திருவிழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஒரே நாளில் லட்சம் பேர் புத்தகம் வாசித்தனர்

*மாணவர்கள் மத்தியில் கலெக்டர் அமர்ந்து வாசித்தார்

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் நடைபெற உள்ள 7வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், வழக்கறிஞர்கள், வணிகர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என ஒரு லட்சம் பேர் ஒரே நாளில் புத்தகம் வாசித்தனர், மாணவர்கள் மத்தியில் கலெக்டர் மெர்சி ரம்யா அமர்ந்து புத்தகம் வாசித்தார்.புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து, 7வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2024 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, ‘புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனில் அதிக கவனம் செலுத்தி எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாவினை நடத்திட அறிவுறுத்தியுள்ளார். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 7வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வரும் 27ம்தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 5ம்தேதி வரை 10 நாட்கள் புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்த புத்தகத் திருவிழாவினை சிறப்புடன் நடத்துவதற்காக மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இன்றையதினம் ‘புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரே நேரத்தில் புத்தகங்களை வாசித்து மகிழ்ந்தனர். இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், வழக்கறிஞர்கள், வணிகர்கள், விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர்கள் புத்தகங்களை வாசித்தனர்.

இதன்மூலம் அனைவரும் புத்தகங்களை நாள்தோறும் வாசிப்பதன் வாயிலாக தங்களது அறிவாற்றல் மென்மேலும் பெருக்கமடையும். மேலும் தங்களுக்கான வாசிப்பு திறனும் அதிகரிக்கும். எனவே மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் நாள்தோறும் அறிவுசார்ந்த புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தங்களது வாழ்க்கை நல்வழிக்கு பேருதவியாக அமையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் மாவட்ட கலெக்டர், புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில், 7வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2024 நடைபெறவுள்ள இடத்தினை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர், புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில், முதலாமாண்டு சேர்ந்துள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரம்யாதேவி, புதுக்கோட்டை ஆர்டிஓ ஐஸ்வர்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம், மா.மன்னர் கல்லூர் முதல்வர் புவனேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர்கள். தங்கம்மூர்த்தி, ராஜ்குமார், பாலகிருஷ்ணன், வீரமுத்து, முத்துக்குமார், தாசில்தார் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post 7வது புத்தகத் திருவிழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஒரே நாளில் லட்சம் பேர் புத்தகம் வாசித்தனர் appeared first on Dinakaran.

Tags : 7th Book Festival ,Pudukottai ,book festival ,
× RELATED விராலிமலையில் திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்