×

மாயனூர் முதல் பெட்டவாய்த்தலை வரை தென்கரை வாய்க்காலின் கரை இருபுறமும் புனரமைக்க வேண்டும்

*விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

குளித்தலை : மாயனூர் முதல் பெட்டவாய்த்தலை வரை தென்கரை வாய்க்காலின் கரை இருபுறமும் புனரமைக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாயனூரில் இருந்து சித்தலவாய், மேட்டு மகாதானபுரம், சிந்தலவாடி, மகிளிப்பட்டி, வல்லம், சீகம்பட்டி, மேல குட்டப்பட்டி, வை புதூர், கணக்குப்பிள்ளையூர், நடுப்பட்டி, கணேசபுரம், பங்களா புதூர், இனுங்கூர், நச்சலூர், புரசம்பட்டி, வழியாக தாயனூர் வரை கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். இந்த கட்டளை மேட்டு வாய்க்கால் பல ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளுக்கான கட்டப்பட்டது.

இந்நிலையில் கரை இருபுறமும் வலுவிழந்து காணப்பட்டதால் இந்த கட்டளை மேட்டு வாய்க்கால் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு கரை இரு புறமும் பலப்படுத்த புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது தண்ணீர் சீராக சென்று வருகிறது இதனால் விவசாயிகள் அதிக அளவில் பாசன வசதி பெற்று வருகின்றனர்.இதேபோல மாயனூரில் இருந்து சித்தலவாய், மகாதானபுரம் சிந்தலவாடி, லாலாபேட்டை, திம்மாச்சிபுரம், வதியம், எல்லரசு பாலம், மணத்தட்டை, குளித்தலை சுங்க கேட், கடம்பர் கோவில், பெரிய பாலம், தண்ணீர் பள்ளி, பட்டவர்த்தி, ராஜேந்திரம், மருதூர், குமாரமங்கலம் ரயில்வே கேட் வழியாக பெட்டவாய்த்தலை சென்று உய்யக்கொண்டான் வாய்க்காலில் கலக்கிறது.

இதனுடைய தூரம் சுமார் 30 கிலோமீட்டர் ஆகும். இந்த தென்கரை வாய்க்கால் மாயனூரில் இருந்து லாலாபேட்டை வரை ஊருக்கு ஒதுக்குப்புறமாக வருகிறது. அதன்பிறகு லாலாபேட்டையில் திருச்சி, கரூர் சாலை ஓரம் செல்கிறது. இதனால் சாலை விரிவாக்க பணிக்கு இந்த தென்கரை வாய்க்கால் கரையை கொஞ்சம் கொஞ்சமாக இடத்தை எடுத்ததால் தற்போது சாலை ஓரம் வாய்க்கால் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.

மேலும் ஒரு சில இடங்களில் ரயில்வே பாதை தென்கரை வாய்க்காலை தொடர்ந்து திருச்சி, கரூர் சாலை நடுவே தென்கரை வாய்க்கால் செல்கிறது. இதனால் கரை இருபுறமும் வலுவிழந்த நிலையில் உள்ளது. மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு சித்தலவாய் மகாதானபுரம் பகுதி மக்கள் இந்த வாய்க்காலில் குளித்து விட்டு குடிநீருக்காக இந்த தண்ணீரை பயன்படுத்தி வந்தனர்.ஆனால் தற்போது மக்கள் அதிகமாக வந்ததால் வாய்க்கால் கரையோரம் குடியிருப்பு வாசிகள் தங்களது வீடுகளில் உள்ள கழிவு நீர்களை அனுமதி இன்றி வாய்க்காலில் விட்டு விடுவதால் சுகாதாரமற்ற நிலையை ஆகிவிட்டது. இதனால் தென்கரை வாய்க்கால் அசுத்தம் அற்ற நீராக செல்கிறது.

இந்நிலையை போக்க தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மாயனூரில் இருந்து பெட்டவாய்த்தலை வரை இருபுறமும் பலப்படுத்த புனர் அமைப்பு பணி செய்து வாய்க்கால் தூய்மைப்படுத்த வேண்டும். அதேபோல் வாய்க்கால் ஓரம் வசித்து வரும் பொதுமக்கள் அசுத்தம் செய்யாமல் இருக்க குப்பைகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post மாயனூர் முதல் பெட்டவாய்த்தலை வரை தென்கரை வாய்க்காலின் கரை இருபுறமும் புனரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tenkarai Canal ,Mayanur ,Petavaitalai ,Sitthalavai ,Mettu Mahadanapuram ,Chinthalavadi ,Maglipatti ,Vallam ,Seegampatti ,Mela Kuttapatti ,Pettavaitalai ,
× RELATED சென்னை ராட்சத கிரேன் மூலம் மாயனூர்...