×

ஊட்டி-குன்னூர் சாலையில் வேலிவியூ பகுதியில் பாதியில் நிற்கும் கம்பி வலை தடுப்புச்சுவர் கட்டும் பணி

*விரைந்து முடிக்க கோரிக்கை

ஊட்டி : ஊட்டி-குன்னூர் சாலையில் வேலிவியூ பகுதியில் பாதியில் நிற்கும் கம்பி வலை தடுப்புசுவர் கட்டும் பணி விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரியில், பெரும்பாலான சாலைகள் மலைபாங்காகவும், பள்ளத்தாக்குகளின் முகப்பு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், சாலைகள் மிக குறுகலாகவும், அதிக கொண்டை ஊசி வளைவுகளை கொண்டும், செங்குத்தாகவும் உள்ளன. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தை பிற மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சாலையாக கூடலூரில் இருந்து ஊட்டி, குன்னூர் வழியாக மேட்டுபாளையம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆகும்.

வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை சரி செய்யும் நோக்கில் இச்சாலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சாலை குறுகலாக இருந்த இடங்கள், விபத்து ஏற்படும் இடங்கள் கண்டறிந்து விரிவாக்கம் செய்து தடுப்புச்சுவர் அமைத்தல், மழைநீர் வழிந்தோட வசதியாக நிலத்தடி குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஊட்டி-குன்னூர் இடையே வேலிவியூ பகுதியில் குறுகலாக உள்ள பகுதிகளில் சாலையை விரிவாக்கம் செய்யும் வகையில் வழக்கமான தடுப்பு சுவர்போல் இல்லாமல் இந்த தடுப்புச்சுவர் கற்கள் கம்பி வலைகளின் உதவியுன் கட்ட திட்டமிடப்பட்டது. கேபியன் வால் எனப்படும் கற்கள் மற்றும் துரு பிடிக்காத வலைக்கம்பிகளைக்கொண்டு இத்தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.

ஒருபகுதியில் பணிகள் முடிக்கப்பட்டு, இதன் தொடர்ச்சியாக அருகில் உள்ள குறுகலான பகுதியையும் விரிவாக்கம் செய்யும் பொருட்டு கேபியன் வால் தடுப்புசுவர் அமைக்கும் பணி துவக்கப்பட்டு ஆரம்ப கட்டத்திலேயே பணிகள் நிற்கின்றன. எனவே, இப்பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் ஏற்கனவே முழுமையாக கம்பி வலை தடுப்புசுவர் கட்டிய பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள கற்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தி சாலை அமைக்க வேண்டும். எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post ஊட்டி-குன்னூர் சாலையில் வேலிவியூ பகுதியில் பாதியில் நிற்கும் கம்பி வலை தடுப்புச்சுவர் கட்டும் பணி appeared first on Dinakaran.

Tags : Valleyview ,Ooty-Coonoor road ,Ooty ,Nilgiris ,Dinakaran ,
× RELATED நகர திமுக சார்பில் இன்று பொது உறுப்பினர்கள் கூட்டம்