×
Saravana Stores

100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை

சத்தியமங்கலம் : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் அவர்களது வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி தாலுகாவில் உள்ள சத்தியமங்கலம் பவானிசாகர் மற்றும் தாளவாடி ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 40 ஊராட்சிகளில் கடந்த மூன்று மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படவில்லை. இதனால், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தங்களது அன்றாட செலவுகளுக்கு சிரமப்பட்டு வந்தனர்.

மேலும், வேலை வழங்கக்கோரி அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகங்களில் மனு அளித்தும் இதுவரை வேலை வழங்கப்படாததால் நேற்று சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை உறுதியளிப்பு திட்டத்தில் உள்ள சட்டத்தின்படி உடனடியாக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும். இல்லையென்றால் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி வேலைக்கான ஊதியத்தில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை நிவாரணம் வழங்க சட்டத்தில் இடம் உள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தொடர்ச்சியாக 4 மணி நேரமாக போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் கோபிசெட்டிபாளையம் ஆர்டிஓ கண்ணப்பன், சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன், தாசில்தார் சக்திவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து ஆர்டிஓ கண்ணப்பன் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கலந்தாலோசித்தார். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் 10 நாட்களுக்குள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓவிடம் கூறினர்.

ஆர்டிஓ போராட்டத்தில் ஈடுபட்ட 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிடம் 10 நாட்களுக்குள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ஒன்றிய பாஜக அரசு ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் படிப்படியாக நிதியை குறைத்து வருகிறது. இதன்காரணமாக, 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுமையாக வேலை அளிப்பதில்லை. கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் இந்த திட்டத்தையே நம்பி உள்ளதால் தற்போது மூன்று மாத காலமாக பணி வழங்காத நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ஆண்டு முழுவதும் வேலை வழங்க உறுதி செய்யும் விதமாக உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணி வழங்க வேண்டும்.

இல்லையெனில் வேலை உறுதி திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலித்தொகையில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை நிவாரண தொகை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இப்போராட்டத்தில் மாவட்ட செயலாளர் மோகன்குமார், கட்சி நிர்வாகிகள் முருகன், மகேந்திரன், சக்திவேல், நடராஜ், வேலுமணி, சுரேந்தர், மோகன், ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Dinakaran ,
× RELATED போக்சோ வழக்கில் கைதான தொழிலாளி குண்டாசில் சிறையில் அடைப்பு