×

நெல்லை டவுன் பகுதியில் கண்டெடுப்பு 350 ஆண்டு பழமையான ‘அரிகண்டம்’ வகை நடுகல்

*பல்கலை மாணவர்கள் கள ஆய்வில் ருசிகர தகவல்

நெல்லை : நெல்லை டவுனில் 350 ஆண்டுகள் பழமையான போருக்கு முன் பலி கொடுக்கப்பட்டவரின் நினைவு நடுகல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் மாணவர்கள் கள ஆய்வில் கண்டறிந்தனர்.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் பட்டப்படிப்பு மாணவர்கள் டெல்பின், ஜெகன் நிவாஸ், ஜெகன் ஆகியோர் கள ஆய்வின் போது நெல்லை டவுன் காட்சி மண்டபத்திற்கு அருகே நடுகல் ஒன்றை அடையாளம் கண்டனர். இந்த நடுகல் திருஞானசம்பந்தர் கோயிலுக்கு எதிரே 100மீ தொலைவில் சாவா நாயனார் தெருவில் உள்ளது.

அந்தத் தெருவின் ஆரம்பத்தில் தெற்கு பார்த்தபடி அரிகண்டம் வகையைச் சேர்ந்த ஒரு நடுகல் நடப்பட்டுள்ளது. தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக, தியாகத்தின் சின்னமாக தொன்று தொட்டு நடைமுறையில் இருந்தவை அரிகண்டம், நவகண்டம் என வரலாறு கூறுகிறது. இதேபோல் புலவர்களின் திறமையை நிரூபிக்க யமகண்டம் என்ற முறையும் நடைமுறையில் இருந்திருக்கிறது.

தனது தலையை ஒரே முயற்சியில், தானே அரிந்து பலியிடுவதற்கு ‘அரிகண்டம்’ என்று பெயர். உடலின் ஒன்பது பாகங்களை தானே அரிந்து கொற்றவைக்குப் பலியிடுவதுதான் ‘நவகண்டம்’. இது ஒரு விழா போல் நடத்தப்படுவதும் உண்டு. அரிகண்டம் கொடுப்பதற்கு முன் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். அரிகண்டம் ‍கொடுப்பவர் இடையில் உடைவாளும், மார்பில் கவசமும் தரித்து போர்வீரன்போல் கோலம் பூண்டு இருப்பார்.

கொற்றவைக்கு பூசை முடித்து பின்பு, தனது இடது கையினால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட்டிக் கொண்டு இறப்பார். அரிகண்டம், அதாவது தலையை அறுத்துக் கொள்வதை சாதாரண வீரன் கூட செய்துவிட முடியும். ஆனால் நவகண்டம் அதாவது ஒன்பது இடங்களில் வெட்டிக் கொள்வது, தலைசிறந்த வீரனும் தியாகியும் மட்டுமே செய்யக்கூடியது என்கிறது வரலாறு.

எதிரி நாட்டுடன் போரில் வெல்லவும், உடல் நலம் குன்றி இருக்கும் மன்னன் உயிர் பிழைக்கவும், ஓடாத தேரை ஓட வைக்கவும், பெரும் அவமானத்துக்கு உள்ளான ஒருவன் அதில் இருந்து மீளவும், நாடு வளம் பெற தாமே விரும்பி வேண்டிக் கொண்டும், நோயாலோ காயத்தாலோ இறந்துபோக விரும்பாத வீரன், மரண தண்டனை பெற்ற வீரன், தன்னுடைய தியாகத்தைக் காட்டவும், இப்படி அரிகண்டம், நவகண்டம் கொடுப்பது வழக்கம்.

இப்போது முக்கியமானவர்களுக்குப் பாதுகாப்பு படை இருப்பது போன்று முன்பு சோழர்களுக்கு வேளக்காரப் படைகளும் பாண்டியர்களுக்கு தென்னவன் ஆபத்துதவிகள் என்ற படைகளும் இருந்தன. தங்கள் கவனக்குறைவினாலோ, தங்களை மீறியோ, அரசருக்கு ஆபத்து நேர்ந்து விட்டால், கொற்றவை சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதை வழக்கமாகக் கொண்டவர்கள் இவர்கள். கொற்றவையின் முன்பாகத் தன் வேண்டுதலை நிறைவேற்ற தலையை அறுத்துப் பலியிட்டுக் கொண்டவர்களைப் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் உள்ளன.

இதுகுறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர்களான முருகன், மதிவாணன் ஆகியோர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் இந்த அரிகண்ட சிற்பங்கள் பல்வேறு இந்து சமய கோயில்களில் காணப்படுகின்றன. சில சிற்பங்கள் கோயில்களில் அல்லாமல் வெட்ட வெளியில் இருக்கின்றன. டவுன் காட்சி மண்டபம் அருகேயுள்ள இந்த நடுகல்லில் கட்டுமஸ்தான உடலையும், துடிக்கும் மீசையும் உள்ள இரண்டு வீரர்கள் தங்கள் கழுத்தில் கத்தியால் குத்திக் கொள்ளுவது போல் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது.

முதல் சிலை நான்கடி உயரமும், அடுத்து மூன்றடி உயரமும் உள்ளது. இச்சிலை செதுக்கி சுமார் 350 ஆண்டுகள் கடந்துள்ளது. பொதுவாக இதுபோன்ற நடுகற்கள் வடக்கு திசை நோக்கி நடப்படும். மாணவர்கள் அடையாளம் கண்ட நடுக்கல் தெற்கு நோக்கி நடப்பட்டிருந்தது. போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால் இந்த நடுகல்லை அகற்றி தெற்கு நோக்கி நட்டுவைத்ததாக பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

இதுபோல் பழைய குற்றாலத்திற்கு அருகேயுள்ள அங்கராயபுரத்தில் தொல்லியல் மாணவிகள் நடுகல் ஒன்றை அடையாளம் கண்டனர். அதில் ஒரு வீரன் தன் கழுத்தில் கத்தியால் குத்திக் கொள்ளுவது போல் சிலை வடிக்கப்பட்டிருந்தது. இது வடக்கு நோக்கி நடப்பட்டிருந்தது.’’ என்றனர். நடுகல்லை கள ஆய்வு மேற்கொள்ள உதவிய மாணவர்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், தொல்லியல் துறைத்தலைவர் (பொறுப்பு) சுதாகர் ஆகியோர் பாராட்டினர்.

நடுகல்லை வழிபடும் மக்கள்

நெல்லை டவுனில் நடுகல் இருக்கும் இடத்திற்கு சாவா நாயனார் தெரு எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 350 ஆண்டுகளில் சாகா நாயனார் என்ற பெயர் மருவிச் சாவா நாயனார் தெரு என அழைக்கப்பட்டு இருக்கலாம். நடுகல்லை பகுதி மக்கள் சாவானயனார் என இன்றும் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த தெருவில் சுமார் 10 வீடுகள் உள்ளன. அவர்கள் பலஆண்டுகளாக நடுகல்லை வழிப்பட்டு, பாதுகாத்து வருவதாக தொல்லியல் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

The post நெல்லை டவுன் பகுதியில் கண்டெடுப்பு 350 ஆண்டு பழமையான ‘அரிகண்டம்’ வகை நடுகல் appeared first on Dinakaran.

Tags : MANONMANANIYAM ,SUNDARAN UNIVERSITY ARCHAEOLOGICAL ,NELLA TOWN ,Nella Manonmaniam ,Sundaranar University ,Rice Town ,Dinakaran ,
× RELATED நெல்லை டவுன் பால் வியாபாரி கொலை வழக்கில் இருவர் கைது