×

ஆரல்வாய்மொழியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலட்சியத்தால் வாலிபர் சாவு

*2 மணி நேரம் உயிருக்கு போராட்டம்

ஆரல்வாய்மொழி : ஆரல்வாய் மொழியில் 108 ஆம்புலன்ஸ் அலட்சியத்தால் 2 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட வாலிபர் பரிதாப உயிரிழந்தார்.குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் சதீஸ்வரன் (36). இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் ஊருக்கு வந்த சதீஸ்வரன் நேற்று காலையில் திடீரென்று வீட்டில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஆட்டோவில் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.ஆனால் வெகு நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை.

இதனால் செய்வது அறியாது உறவினர்கள் தவித்தனர். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது . அதில் இருந்த ஊழியர்கள் பரிசோதித்து விட்டு, சதீஸ்வரன் உயிர் பிரிந்து விட்டதாக கூறி, ஆம்புலன்ஸில் ஏற்ற முடியாது என கூறிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை ஆட்டோவில் மீண்டும் வீட்டுக்கு கொண்டு சென்றனர். ஆட்டோவில் இருந்து கீழே இறக்கிய போது அவருடைய உடலில் அசைவு இருந்ததை உறவினர்கள் பார்த்தனர். இதையடுத்து மீண்டும் அதே ஆட்டோவில் ஆரல்வாய்மொழி அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். இதனிடையே 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆரல்வாய்மொழி காவல் நிலையம் அருகே வரும் போது 108 ஆம்புலன்சும் அப்பகுதிக்கு வரவே மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு உறவினர்கள் ஊழியர்களிடம் மன்றாடினர். ஆனால் ஆம்புலன்ஸ் ஊழியர்களோ இவர் இறந்து விட்டார்,அவரை ஏற்ற முடியாது என தெரிவித்துவிட்டனர். உடனே உறவினர்கள் ஆட்டோவில் அவரை ஆரல்வாய்மொழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் இல்லாத காரணத்தினால் செண்பகராமன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அதே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

இதனிடையே 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் ஏன் அழைத்துச் செல்ல மாட்டீர்கள் என்று உறவினர்களும் பொதுமக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு வழியாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை அழைத்து செல்ல சம்மதித்தனர் . மிஷன்காம்பவுண்ட் அருகே சென்றுகொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி , சதீஸ்வரனை ஆம்புலன்ஸில் ஏற்றி செண்பகராமன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மருத்துவர் பரிசோதித்த போது அவருக்கு உயிர் இருந்தது. உடனடியாக சதீஸ்வரன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறிது நேரத்தில் சதீஸ்வரன் உயிர் இழந்தார். சுமார் 2 மணி நேரம் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அலட்சியத்தால் சதீஸ்வரன் இறந்து விட்டதாக உறவினர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டினர்.

முதலில் ஆரல்வாய்மொழி மருத்துவமனையில் பரிசோதித்த போதே ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை நாகர்கோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

 

The post ஆரல்வாய்மொழியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலட்சியத்தால் வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : Aralvaimozhi ,Aralwai Mozhi ,Aralwai ,Krishnakumar ,Satheeswaran ,Moovender Nagar ,Aralwai Mozhi, Kumari district ,
× RELATED ஆரல்வாய்மொழியில் அண்ணா கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் தூய்மை பணி