×

பயனாளர்களை ஏமாற்றி கையெழுத்து பெற்று கையாடல் நட்டாலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு?

*செயலாளர் மீது பரபரப்பு புகார்

மார்த்தாண்டம் : நட்டாலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயனாளர்களை ஏமாற்றி கையெழுத்து பெற்று பண மோசடி நடந்துள்ளதாக 3 பேர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக செயலாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.நட்டாலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் பயனாளிகளிடம் கையெழுத்து பெற்று பண மோசடி செய்வதாக பகீர் புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 2 பெண்கள் உள்பட 3 பேர் நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளரிடம் புகார் அளித்துள்ளனர். அவர்களில் நட்டாலம் கீழ்விளை பகுதியை சேர்ந்த விவசாயி ராஜ் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:நான் நட்டாலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றதாகவும், அதற்கான தவணையை கட்ட தவறியதாகவும், ரூ.35931 மற்றும் வட்டியைஉடனே திருப்பி செலுத்துமாறு எனக்கு நோட்டீஸ் வந்துள்ளது.

ஆனால் நான் அதுபோல் எவ்வித கடனும் வாங்கவில்லை. அப்படி இருக்கையில் எனது கையெழுத்தை போலியாக பயன்படுத்தி பணத்தை மோசடி செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கோணம் சரல்விளை பகுதியை சேர்ந்த மரியதங்கம் (65) அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் கறவை மாடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் பெறுவதற்காக நட்டாலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் விண்ணப்பித்தேன்.

அப்போது அதனை பெறுவதற்கு ரூ.20 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்துமாறு செயலாளர் கூறினார்.அதன்படி அந்த தொகையை துணை செயலரிடம் கொடுத்தேன். ஆனாலும் செயலாளர் என்னிடம் ரூ.40 ஆயிரம் மட்டுமே கொடுத்தார். பின்னர் சிறிது நாட்களில் தமிழக அரசு எனது கடன் தொகையை தள்ளுபடி செய்தது.

எனவே நான் வைப்புத்தொகையாக செலுத்திய ரூ.20 ஆயிரத்தை செயலாளரிடம் கேட்டேன். ஆனால் அவர் உங்கள் வைப்புத்தொகையை கடனில் கழித்துவிட்டேன். அதனை தரமுடியாது என்றார். நான் வற்புறுத்தியதால் எனக்கு ரூ.50 ஆயிரம் கடன் தருவதாக என்னிடம் ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர்.ஆனாலும் எனக்கு ரூ.15 ஆயிரம் மட்டுமே கொடுத்தனர். இதுகுறித்து கேட்டபோது, நீங்கள் அடகு வைத்த நகை குறைந்த தொகைக்குத்தான் ஏலத்துக்கு விடப்பட்டது. எனவே பாக்கி தொகை நீங்கள் கட்ட வேண்டியிருந்தது. அதற்காக இந்த பணத்தை அதில் கழித்துவிட்டேன் என கூறினார்.

இது எனக்கு சந்தேகமாக உள்ளது. கறவை மாடு கடன் தொகையில் ரூ.60 ஆயிரம், வைப்புத்தொகை ரூ.20 ஆயிரம் மற்றும் நகையை ஏலமிட்டதாக கூறி மோசடி செய்துள்ளனர். எனவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.இதேபோல் மாமூட்டுக்கடை விடலிக்கூட்டம் பகுதியை சேர்ந்த சகாயராணி அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நான் ₹50 ஆயிரம் கடன் பெற்றதாகவும், கடன் செலுத்துவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதால் நான் செலுத்திய தொகை போக மீதமுள்ள ரூ.37500 திருப்பி செலுத்த வேண்டுமென்றும் எனக்கு நோட்டீஸ் வந்துள்ளது.ஆனால் நான் இப்படி எவ்வித கடனும் பெறவில்லை. எனது பெயர், கையெழுத்தை போலியாக பயன்படுத்தி கடன் வழங்கப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மேற்கண்ட 3 புகார்கள் மீதும் குமரி மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.23 லட்சம் நஷ்டம்

இந்த கூட்டுறவு சங்கத்தில் பல உறுப்பினர்கள் பெயரில் குறைந்த கடனுக்கான விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து பெற்றுவிட்டு அவர்கள் கேட்ட தொகையை விட அதிகமாக அவர்களுக்கு தெரியாமலேயே கடன் வழங்கியதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும் நட்டாலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க எல்லைக்கு அப்பாற்பட்டு வெளிநபர்களுக்கு பல லட்சம் ரூபாய்க்கு மோசடியாக கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சங்கம் 2023-24ம் நிதி ஆண்டின் படி ரூ.23 லட்சம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு

நட்டாலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் கடந்த மாதத்துடன் பணி ஓய்வு பெற்றுவிட்டார். முதற்கட்ட நடவடிக்கையாக அவரின் ஓய்வுகால பணப்பலன்கள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.செயலாளர் மீது கடந்த 2006ம் ஆண்டில் பணமோசடி தொடர்பான வழக்கு குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post பயனாளர்களை ஏமாற்றி கையெழுத்து பெற்று கையாடல் நட்டாலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு? appeared first on Dinakaran.

Tags : Natalam Elementary Agricultural Cooperative Society ,Marthandam ,Natalam Primary Agricultural Cooperative Society ,Natalam ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டத்தில் பைக் திருட்டு