×

8 காலாண்டு தேர்வுகள், 2 முறை இன்டர்ன்ஷிப் பயிற்சி.. நீட் தேர்வுக்கு மாற்றாக முன்னாள் IAS அதிகாரிகள் கொடுத்த பரிந்துரை!

டெல்லி : நீட் முறைகேடு தொடர்பாக பீகார் மற்றும் மராட்டியத்தில் மேலும் மூன்று பேரை சிபிஐ கைது செய்துள்ள நிலையில், நீட் தேர்வுக்கு மாற்றாக சில பரிந்துரைகளை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒன்றிய அரசிடம் முன்வைத்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நடந்த நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. குஜராத், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 30 பேரை கைதும் செய்துள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம், முறைகேட்டால் பயன் அடைந்தவர்களின் முழு விவரத்தை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளது.

பயன் அடைந்தவர்களை கண்டறிய முடியாவிட்டால் மறு தேர்வுக்கு உத்தரவிட நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. இதனிடையே நீட் தேர்வுக்கான மாற்று தேர்வு தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒன்றிய அரசுக்கு தாமாக முன் வந்து சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். முன்னாள் கல்வித்துறை செயலாளர் சுப்பிரமணியம், கோல் இந்தியா லிமிடெட் நிறுவன முன்னாள் தலைவர் சுதீர்த்த பட்டாச்சார்யா மற்றும் ஜோத்பூர் ஐஐடி-யின் முன்னாள் இயக்குநர் பிரேம் கல்ரா ஆகியோர் கூட்டாக ஒன்றிய அரசுக்கு சில யோசனைகளை முன்வைத்துள்ளனர்.

அதில் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் மொத்தம் 8 காலாண்டு தேர்வுகள் மற்றும் 1 பொதுத் தேர்வை நடத்தலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளனர். மேலும் மேல்நிலை கல்வியில் 2 முறை இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் படிப்புத் திறன், சமூக மற்றும் தொழில் திறனை என ஒட்டுமொத்த திறனையும் அளவிடும் வகையிலான இறுதி பொதுத் தேர்வு ஆகிய மூன்றுக்கு 3 அடுக்கு முறையில் 2 ஆண்டுகளாக தொடர்ச்சியான மதிப்பீட்டு முறையை மேற்கொள்ளலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளனர். நீட், ஜேஇஇ போன்ற அனைத்து உயர்கல்வி நுழைவு தேர்வுகளுக்கு மாற்றாக இந்த முறை பின்பற்றலாம் என்றும் இதன் மூலம் பள்ளி கல்வி மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

The post 8 காலாண்டு தேர்வுகள், 2 முறை இன்டர்ன்ஷிப் பயிற்சி.. நீட் தேர்வுக்கு மாற்றாக முன்னாள் IAS அதிகாரிகள் கொடுத்த பரிந்துரை! appeared first on Dinakaran.

Tags : IAS ,NEET ,Delhi ,CPI ,Bihar ,Marathia ,EU government ,Dinakaran ,
× RELATED ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறைவு பெற்ற 10 பேர் உதவி...