சென்னை: கல்லூரி இடங்களை ரத்து செய்யும் மாணவர்களின் கட்டணத்தை திருப்பி அளிக்காத கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யு.ஜி.சி. எச்சரித்துள்ளது. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தற்போது மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அவ்வாறு தேர்வு செய்த இடங்களை ரத்து செய்யும் மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்குவது தொடர்பாக பல்வேறு புகார்கள் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யு.ஜி.சி.) வந்தது.
இதனையடுத்து கல்லூரி, பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தேர்வு செய்த இடங்களை ரத்து செய்யும் மாணவ-மாணவிகளுக்கு முழு கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்பது உள்பட கட்டண கொள்கைகளை தெரிவித்து இருந்தது.பல்கலைக்கழக மானியக்குழு கட்டணக் கொள்கைகளை அந்தந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு தெரிவித்து இருந்தும், கட்டணத்தை மாணவ-மாணவிகளுக்கு திரும்ப வழங்குவதில் பிரச்சினை தொடர்ந்து இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது பல்கலைக்கழக மானியக்குழு மீண்டும் ஒரு சுற்றறிக்கையை, உயர்கல்வி நிறுவனங்களுக்கு விடுத்துள்ளது.
அந்த சுற்றறிக்கையில், ‘கட்டணத்தை திரும்ப வழங்கும் கொள்கையை சரியாக பின்பற்றாத கல்லூரி, பல்கலைக்கழகங்களின் திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல், ஆன்லைன் படிப்புகளுக்கான அங்கீகாரம், உரிமத்தை நிறுத்தி வைப்பதோடு, புதிய விண்ணப்பத்தையும் ஏற்காதது என அந்தந்த கல்வி நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை யு.ஜி.சி. எடுக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
The post கட்டணத்தை திருப்பி அளிக்காத கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: யு.ஜி.சி. எச்சரிக்கை appeared first on Dinakaran.