×

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் இதுவரை 14 கோடி பேர் பயன்: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் சீர்மிகு மருத்துவக் கட்டமைப்பு மற்றும் சாதனைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் மாணவர்களிடயே பேசியதாவது: மருத்துவத் துறையில் சிறப்பான சாதனைகள் செய்து, சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்’ மூலம் இதுவரை ரூ.136.25 பில்லியன் செலவில், 14 மில்லியன் மக்கள் (14 கோடி பேர்) பயன் பெற்றுள்ளனர். மொத்தப் பயனாளிகளில் 4.32 கோடி மக்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.49.45 பில்லியன் செலவில் உயர் சிகிச்சைகள் பெற்றுள்ளனர். ‘இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம்’ என்ற திட்டத்தின் மூலம் 2,52,981 பேர் கட்டணமில்லா சிகிச்சையைப் பெற்றுள்ளனர்.

‘கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்’ மூலம் 36,69,326 பேர் பயனடைந்துள்ளனர். இதயம் காப்போம் திட்டத்தில் 8,500 நோயாளிகளுக்கு அவசர மாரடைப்பு மருந்துகள் (Loading Dose) வழங்கப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைக்கப்பட்டு, அவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அதேபோல் ‘சிறுநீரக பாதுகாப்பு திட்டம்’ மூலம் மொத்தம் 4,60,000 நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு, 3,361 நோயாளிகள் நாள்பட்ட சிறுநீரக நோய்கள் என சந்தேகிக்கப்பட்டு அவர்கள் உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளரை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 486 தொழிற்சாலைகளில் 2,96,652 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 26,471 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. 2008ம் ஆண்டு தமிழ்நாட்டில் இறந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை தானமாக பெற்று ‘உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் திட்டம்’ தொடங்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல், வயிறு, கைகள் என மொத்தம் 7,783 உறுப்புகள், 3,950 சிறிய உறுப்புகள் மற்றும் திசுக்கள் தானமாக பெறப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.

கொரோனா நோய்க்கு பிந்தைய பாதிப்புகளில் இருந்தும் மக்களுக்கு தேவையான மருத்துவம் அவர்களை சென்றடையும் நோக்கில், ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்’ தமிழ்நாடு முதலமைச்சரால் 2021ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயஉதவி குழு பெண் சுகாதார தன்னார்வலர்கள் (WHVs), மக்களுக்கு தேவையான மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி வருகின்றனர். கிராமப்புறங்களில் 8,713 மற்றும் நகர்ப்புறங்களில் 2,256 பேர் என்று மொத்தம் 10,969 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் 1 கோடி பயனாளிகளை தாண்டி செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் இதுவரை 14 கோடி பேர் பயன்: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Minister ,M. Subramanian ,Harvard ,University ,CHENNAI ,Tamil Nadu government ,Harvard University ,America ,Tamil ,Nadu ,
× RELATED உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!