×

சிதம்பரம் நடராஜர் கோயில் திருமஞ்சன விழாவில் பக்தர்கள் கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு தடை விதிக்கப்படவில்லை: சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனம் விழாவின் போது, கனகசபை மீது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படாத நிலையில், விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாமென அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று முதல் 3 நாட்கள் ஆனி திருமஞ்சன விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது பக்தர்கள், கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு தடை விதிக்கப்படவில்லை. விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். தங்கள் கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளுக்கு மனுதாரர் விண்ணப்பம் அளிக்கலாம். இந்த விவகாரம் தொடர்பாக அறநிலைய துறை அடுத்த வாரம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

The post சிதம்பரம் நடராஜர் கோயில் திருமஞ்சன விழாவில் பக்தர்கள் கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு தடை விதிக்கப்படவில்லை: சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Kanakasabha ,Chitambaram Nataraja Temple ,Thirumanjana ceremony ,Madras High Court ,CHENNAI ,Chennai High Court ,Charitable Trusts Department ,Ani Thirumanjanam ,Chidambaram Nataraja temple ,Chidambaram… ,Kanaka Sabha ,
× RELATED சிதம்பரம் கோயிலில் கனகசபை மீது ஏறி...