×

கள்ளக்குறிச்சி சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த 50 போலீசார்: பரபரப்பு தகவல்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ விஷசாராயம் குடித்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மொத்தம் 229 பேர் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுவை ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 65 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் குணமடைந்து இதுவரை 157 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் 3 பேர் சேலம் அரசு மருத்துவமனையிலும், புதுவை ஜிப்மர் மருத்துவமனயில் 4 பேர் என மொத்தம் 7 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விஷ சாராயம் உயிரிழப்பு விவகாரத்தில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்பி சமய்சிங் மீனா உள்ளிட்ட 9 காவலர்களை பணியிட நீக்கம் செய்து தமிழக அரசு கடந்த 19ம் தேதி அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இந்த விஷசாராய விவகாரத்தில் இதுவரை மெத்தனால் கடத்துவதற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான புதுச்சேரி மடுகரை மாதேஷ், கள்ளக்குறிச்சி பிரபல சாராய வியாபாரி கருணாபுரம் கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உள்பட 22 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளியான புதுவை மாதேஷ், பிரபல சாராய வியாபாரிகள் கருணாபுரம் கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சேஷசமுத்திரம் பிரபல சாராய வியாபாரி சின்னதுரை உள்பட 11 பேர்களை சிபிசிஐடி போலீசார் மூன்று நாள் காவல் விசாரணைக்கு எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சாராய வியாபாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்த உள்ளூர் காவலர்கள் முதல் வெளியூர் காவலர்கள் வரை யார்? யார்? தொடர்பில் இருந்தனர் என்ற விபரங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் பல சாராய வியாபாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்த போலீசாரின் விபரங்களை சாராய வியாபாரிகளின் செல்போன் நம்பர்களை கொண்டு விவரம் சேகரிக்கப்பட்டுள்ளன.இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றி வரும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் மதுவிலக்கு காவல்துறை அதிகாரிகளின் பட்டியல்களும், தனிப்பிரிவு காவலர்கள் பெயர் பட்டியல் விபரங்களை சேகரிக்கப்பட்டதில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மெத்தனால் கலந்த விஷ சாராயம் விவகாரத்தில் முன்ேப கண்டறிந்து தடுக்க தவறியதாக சில காவல்துறை அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு பெயர் பட்டியல் விபரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் சம்மந்தப்பட்ட காவல்துறையினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

The post கள்ளக்குறிச்சி சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த 50 போலீசார்: பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kalalakurichi Karunapuram ,Madhavacheri ,Seshamutram ,Viluppuram ,Salem ,Puduwa Zipuram Marr ,Dinakaran ,
× RELATED முரண்பாடு உருவாக்குவதே ஆளுநரின் நோக்கம்: திருமாவளவன் பேட்டி