×

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு; விக்கிரவாண்டியில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தொடர்ந்து நாளை (10ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு நாளை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி அபிநயா மற்றும் சுயேட்சைகள் 29 பேர் போட்டியிடுகின்றனர். அதிமுக, தேமுதிக போட்டியிடாத நிலையில் மும்முனை போட்டி உள்ளது. திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அதேபோல், பாமக வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி, பாஜ தலைவர் அண்ணாமலை, அமமுக டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களும் பிரசாரம் மேற்கொண்டனர். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் பங்கேற்காத நிலையில் வீடியோவை வெளியிட்டு விக்கிரவாண்டியில் மிகப்பெரிய வெற்றியை தேடித்தரவும், சமூக நீதியை நிலைநாட்டிட வேண்டுமெனவும் பொதுமக்கள், நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதனிடையே கடைசி இரு நாட்களில் திமுக இளைஞரணி அமைப்பாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் 8 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். நேற்று மாலை 5 மணியளவில் இறுதி கட்டமாக தலைவர்கள் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். அதன்படி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி பேரூராட்சியில் பிரசார பொதுக்கூட்டத்தில் மக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார். அதேபோல் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கெடாரிலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரத்தூரிலும் இறுதிகட்ட பிரசாரத்தை முடித்தனர். இதை தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு மேல் இறுதிகட்ட பிரசாரம் முடிவடைந்ததும் தொகுதியில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனை காவல்துறையினர் சோதனையிட்டு உறுதி செய்தனர். தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 29 பேர் என மொத்தம் 2,37,031 பேர் வாக்களிக்க உள்ளனர்.

வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா ஒரு முதன்மை அலுவலர் மற்றும் 3 நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 பேர் பணியாற்றுவர். அதன்படி, 276 வாக்குச்சாவடிகளில் 1,355 பேர் பணியில் ஈடுபடுகின்றனர். வாக்குசாவடிகளுக்கு செல்வதற்கான 23 மண்டல அலுவலர்களுக்கான வாகனங்கள், 23 மண்டலத்திற்கான வாக்குபதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் பணிகள் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் பழனி ஆய்வு செய்தார். இன்று விக்கரவாண்டி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈ.வி.எம்.), வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் விவிபேட், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் ஜி.பி.எஸ்., கருவி பொருத்திய வாகனங்கள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்குசாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இன்று அனுப்பி வைக்கப்பட்டன.

நாளை காலை 6 மணிக்கு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். இதை தொடர்ந்து 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 6 மணிக்கு முடிகிறது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது என அந்தந்த வாக்குச்சாவடி அதிகாரிகள் தலைமை தேர்தல் அதிகாரிக்கு அப்டேட் செய்து அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதற்றமான, மிக பதற்றமான 44 வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம் பாதுகாப்புக்கும், வெப் கேமரா பொருத்தப்பட்டு நுண்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி வடக்கு மண்டல ஐஜி நரேந்திர நாயர் தலைமையில் 2,500 பேர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு துணை ராணுவம், ஆயுதப்படை, உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

 

The post வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு; விக்கிரவாண்டியில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Wikriwandi ,Viluppuram ,Vikrawandi Assembly ,Viluppuram District ,Wickrawandi Dimuka ,Dinakaran ,Wikriandi ,
× RELATED விக்கிரவாண்டியில் வருகிற 23ம் தேதி...