×

முகலாய செல்வாக்கை மீட்டெடுத்த ஹீராமண்டி

நன்றி குங்குமம் தோழி

பிரமாண்டத்திற்கு மறுபெயர் சஞ்சய் லீலா பன்சாலி என்றுதான் சொல்ல வேண்டும். அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களிலும் அதனை நாம் கண் கூடாக கண்டு ரசித்துள்ளோம். தற்போது ஓ.டி.டி தளத்தில் வெளியாகி இருக்கும் ஹீராமண்டியும் அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளது. இதில் அமைக்கப்பட்டிருக்கும் செட் மற்றும் கதாபாத்திரங்களின் உடைகளில் இருக்கும் அதே பிரமாண்டத்தினை இயக்குநர் கதாநாயகிகள் மற்றும் கதாநாயகன்கள் அணிந்திருக்கும் நகைகளிலும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒவ்வொரு உடைக்கு ஏற்ப அவர் நகையினை வடிவமைத்திருக்கும் விதம் மேலும் மற்றுமொறு பிரமாண்டத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள நகைகள் அனைத்தும் முழுக்க முழுக்க தங்கம், முத்து மற்றும் விலையுயர்ந்த கற்கள் கொண்டு வினய் மற்றும் அனுஷா குப்தா தம்பதியினர் வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். இவர்கள் பரம்பரை பரம்பரையாக தங்க நகை வியாபாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘ஹீராமண்டியில் முழுக்க முழுக்க முகலாய அரசர்களின் ராஜ்ஜியத்தில் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய நகைகளைதான் வடிவமைத்து இருக்கிறோம்’’ என்கிறார்கள் விஜய் மற்றும் அனுஷா குப்தா தம்பதியினர். ‘‘எங்கள் மேல் முழு நம்பிக்கை வைத்துதான் சஞ்சய் லீலா பன்சாலி அவர்கள் ஹீராமண்டி தொடருக்காக நகை வடிவமைக்க சொல்லிக் கேட்டுக் கொண்டார். எங்களின் ஸ்ரீபாராமணி நகைக்கடை 1789ல் துவங்கப்பட்டது. பரம்பரை பரம்பரையாக கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக நாங்க பாரம்பரியம் மாறாமல் நகைகளை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறோம்.

என்னுடைய முன்னோர்கள் முகலாயர் ராஜ்ஜியத்தில் பொருளாளராக வேலை பார்த்து வந்தார்கள். அதனால்தான் அவர் எங்களை தேர்வு செய்திருக்கிறார்’’ என்றார் வினய்.‘‘ஆறாம் தலைமுறையாக வெற்றிகரமாக நகை பிசினஸ் செய்து வரும் வினயின் ஸ்பெஷாலிட்டியே அவரின் விலைஉயர்ந்த நகைகள் ரூமி, எமரால்டு, புக்ராஜ், வைரங்கள் மற்றும் போல்கி கற்களைக் கொண்டு அலங்கரிக்கப்படுவதுதான். அவைதான் சஞ்சய் லீலா பன்சாலியை ஈர்த்துள்ளது.

‘‘அவர் தன்னுடைய படைப்பிற்காக பலவிதமான நகைகள் குறித்து ஆய்வுகளில் ஈடுபட்டு இருந்தார். அதனால் நான் அவரை எங்களின் வடிவமைப்புகளை பார்ப்பதற்காக அழைத்திருந்தேன். அதில் பஸ்ரா முத்துக்கள் பதிக்கப்பட்ட தலையில் மாட்டக்கூடிய பாசா மற்றும் டிகா போன்ற நெத்திச்சுட்டி வகைகள், மூக்கு வளையங்கள் மற்றும் நெக்லஸ் போன்ற நகைகள் அவரை மிகவும் கவர்ந்தன. அதனால் ஒவ்வொரு நகைகளும் மிகவும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார். இவை அனைத்தும் ஒரிஜினல் ரூபி, எமரால்ட், வைரங்கள், போல்கி கற்கள் பொறிக்கப்பட்ட தங்க நகைகள். நெக்லஸ்கள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக கைகளாலே வடிவமைக்கபட்டன. பல அடுக்குகள் கொண்ட நெக்லஸுடன் இணைக்கப்பட்டு வரும் கம்மல்கள், நெற்றிச்சுட்டிகள், மூக்கு வளையங்கள் அனைத்தும் முகலாயர்கள் காலத்தில் அணியப்பட்ட பாரம்பரிய டிசைன்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே மூன்று வருடமாக மிகவும் கடுமையாக உழைத்து உருவாக்கினோம்.

பழங்காலத்தில் எவ்வாறு கைகளால் வடிவமைப்பார்களோ அதே முறையில் கிலோ கணக்கில் நாங்க நகைகளை வடிவமைத்தோம். ஒரு செட் நகைகளை வடிவமைக்க மட்டுமே சில மாதங்கள் எடுத்தன. இந்த மூன்று வருடத்தில் எங்க கைவினைஞர்களின் கடும் உழைப்பினால் கிட்டத்தட்ட மூன்று அறைகள் கொள்ளும் அளவிற்கு நாங்க நகைகளை டிசைன் செய்திருந்தோம்’’ என்றார் வினய்.

ஒவ்வொரு கலைஞனுக்கும்தான் இயக்க போகும் கதையை எப்படி அமைக்க வேண்டும் என்ற கற்பனை இருக்கும். அதை புரிந்து கொண்டு பாரம்பரிய நகைகளை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்ற அடிப்படை கொள்கையுடன் ஹீராமண்டி பயணத்தை சஞ்சய் அவர்களுடன் இணைந்து துவங்கியுள்ளார் வினய். ‘‘அவர் ஒரு திறமையான கலைஞர். கலையைப் பற்றி நன்கு அறிந்தவர். நாங்களும் நகைகளை கலைநயத்துடன் வடிவமைத்து வருவதால், அவரின் தேடலை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஹீராமண்டியின் பயணம் ஆரம்பிக்கும் முன் அந்தக் கதையின் கரு என்ன என்று நன்கு புரிந்து கொண்டோம். கதையில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் முக்கியத்துவம் என்ன என்று தெரிந்து கொண்டு அதன் பிறகுதான் நகையினை வடிவமைக்க துவங்கினோம். எல்லாவற்றையும் விட கதையை கேட்டோமா? நகையினை வடிவமைத்து கொடுத்தோமா என்று இல்லாமல், முகலாயர்களின் வரலாற்றினை தேடி தெரிந்து கொண்டோம். அதில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்கள் மற்றும் அவர்கள் அன்று பயன்படுத்திய நகைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்த பிறகுதான் எங்களால் இதனை முழு ஈடுபாட்டோடு செயல்படுத்த முடிந்தது. ஒவ்வொரு கதாபாத்திரங்கள் அணியும் நகைகள் அவர்கள் யார் என்பதை அழகாக எடுத்துக்காட்டும் வகையில் உருவாக்கி இருக்கிறோம்.

நான் இந்த பிராஜக்டினை எடுத்து செய்யும் போது, என்னுடைய 200 ஆண்டு கால குடும்பத்திற்குள் பயணித்த அனுபவம் கிடைத்தது. அவர்கள் அந்தக் காலத்தில் கடைபிடித்த மரபு மற்றும் பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. எங்களின் முன்னோர்கள் பயன்படுத்திய நகைகள் குறித்து அருங்காட்சியகம், நூல்களில் பார்த்து தெரிந்து கொண்டேன். அதுமட்டுமில்லாமல் சஞ்சய் அவர்களும் அவருக்கு தெரிந்த விவரங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

அதுவே எனக்கு பெரிய அனுபவத்தை கொடுத்தது. நானும் சஞ்சய் அவர்களும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்ப நகைகளை வடிவமைக்கும் போது, அவர்களின் வயது மற்றும் கதையில் அவர்கள் ஏற்று இருக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் மனதில் கொண்டுதான் டிசைன் செய்தோம்.முகலாயர்களின் நகைகளை வடிவமைப்பதில் சுவாரஸ்யமான வரலாறு உள்ளது. எல்லாவற்றையும் விட மறைந்து போன பழங்கால நகை வடிவமைப்பு முறை மீண்டும் இதன் மூலம் உயிர் பெற்றுள்ளது.

முகலாய பேரரசர்கள் அனைவரும் கலைகளில் மிகவும் தேர்ச்சிப் பெற்றவர்களாக இருந்தனர். தங்களுக்கான நகைகளை உருவாக்கக்கூடிய திறமையான கைவினைஞர்களுக்கு மரியாதை கொடுத்தனர். அவர்களின் அனைத்து நகைகளிலும் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டு இருக்கும். குறிப்பாக வைரம், எமரால்ட், ரூபி, முத்துக்கள் போன்றவை இல்லாமல் அவர்கள் நகையினை பார்க்க முடியாது. இவை அவர்களின் நகைகளுக்கு அழகு சேர்க்கும். மேலும் குந்தன், எனாமல் போன்ற வேலைப்பாடுகள் இணைக்கப்படும் போது அவை நகைகளை மெருகூட்டி எடுத்துக்காட்டும். இவை அனைத்தும் முகலாயர்கள் விட்டுச்சென்ற உலகளாவிய செல்வாக்கு. அந்த செல்வாக்கினை நாங்க மீண்டும் ஹீராமண்டி மூலம் புதுப்பித்து இருக்கிறோம் என்று நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது’’ என்றார் வினய்.

தொகுப்பு: ரிதி

The post முகலாய செல்வாக்கை மீட்டெடுத்த ஹீராமண்டி appeared first on Dinakaran.

Tags : Heeramandi ,Mughal ,Kumkum Dothi Pramandam ,Sanjay Leela Bhansali ,
× RELATED திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் கண்முன் சாலையை கடந்த சிறுத்தை