×
Saravana Stores

வணிகவரித்துறையில் கடந்த நிதியாண்டை விட ரூ.3727 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமையில் இன்று (09.07.2024) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் சார்பில் மறைந்த வணிகரின் குடும்பத்தினரான சென்னை மணலியை சேர்ந்த சி. உமா மகேஸ்வரிக்கு குடும்ப நல நிதி உதவித் தொகையாக ரூ.3,00,000/- (ரூபாய் மூன்று லட்சம்) காசோலையை அமைச்சர் வழங்கினார்கள்.

வணிகவரித்துறையில் 2024-2025 ஆம் நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஏப்ரல், மே & ஜுன்) கடந்த நிதியாண்டைவிட ரூபாய் 3727 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அமைச்சர் அறிவுறுத்தலின்படி கடந்த 02.07.2024 அன்று வணிகவரித்துறை நுண்ணறிவுப்பிரிவின் கூடுதல் ஆணையர் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்ட சிறப்பு சோதனையில் ரூ.1040 கோடி போலி உள்ளீட்டு வரியினை கண்டுபிடித்து போலியான பில் வழங்கிய 316 பதிவுச்சான்றுகள் ரத்துசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பணித்திறனாய்வு கூட்டத்தில் வழங்கப்படும் அறிவுரைகளை சம்பந்தப்பட்ட இணை ஆணையர்கள் தங்கள் கீழுள்ள துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் மாநில வரி அலுவலர்களிடம் கலந்தாலோசித்து வரி வருவாய் அதிகப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தங்கள் கோட்டத்திற்குட்பட்ட நிலுவையில் உள்ள இனங்களை ஆராய்ந்து விரைந்து முடிக்கவும், மேற்கண்ட பணிகளை செயல்படுத்த தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் வசதிகளை அரசுக்கு தெரியப்படுத்தலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தரவுகளின் உண்மை தன்மையினை கண்டறிய அதிநவீன மென்பொருள்கள் விரைவில் துறையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மை செயலாளர் பிரஜேந்திர நவ்நீத் இ.ஆ.ப., வணிகவரித்துறை ஆணையர் முனைவர் டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., இணை ஆணையர் (நிர்வாகம்) பொ. இரத்தினசாமி இ.ஆ.ப., வணிக வரித்துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post வணிகவரித்துறையில் கடந்த நிதியாண்டை விட ரூ.3727 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது: அமைச்சர் பி.மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,P. Murthy ,CHENNAI ,Minister for Commercial Tax ,Registration ,Nandanam Integrated Commercial Tax Complex ,Tamil Nadu ,Tax ,Dinakaran ,
× RELATED மதுரையில் ஒலிம்பிக் போட்டி நடத்துவது குறித்து ஆலோசனை: அமைச்சர் தகவல்