×

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை

சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனராக கூடுதல் டிஜிபி அருண் நேற்று பிற்பகல் பதவியேற்றுக்கொண்டார். அவரை கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, அஸ்ரா கார்க், கபில் குமார் சரத்கர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
புதிதாக பதவியேற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் அண்ணாநகர், பரங்கிமலை துணை கமிஷனராகவும், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர், போக்குவரத்து கூடுதல் கமிஷனராக பணியாற்றி உள்ளேன். இதனால் சென்னையில் உள்ள பிரச்னைகள் என்ன என்று எனக்கு தெரியும். சென்னையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது, குற்றங்கள் நடக்காமல் தடுப்பது, நடந்த குற்றங்களை கண்டறிவது, ரவுடியிசத்தை கட்டுப்படுத்துவதற்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும். தினமும் ஒரு திட்டம் கொடுப்பதால் எந்த பயனும் இல்லை.

போலீசாரின் ரெகுலர் பணிகளை முறையாக செய்தாலே குற்றங்கள் குறையும். போலீஸ் அதிகாரிகளும் சரி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களும் அவர்களின் பொறுப்பை உணர்ந்து பணிகளை சரியாக செய்தாலே எல்லா குற்றங்களும் குறையும். அதை செய்வதற்கான பணிகளை செய்வோம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. இப்போதுதான் பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளேன் இதற்கு மேல் தான் விசாரிப்பேன். என்கவுன்டர் என்பது எல்லாம் கிடையாது.

ரவுடிகளுக்கு எந்த மொழி புரிகிறதோ அந்த மொழியில் சொல்லிக்கொடுப்போம். பொத்தம் பொதுவாக சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று சொல்லக்கூடாது. புள்ளிவிபரங்களை வைத்து பார்க்கும்போது, கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளை ஒப்பிட்டு பார்த்தாலே தமிழ்நாடு மற்றும் சென்னையில் கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நடந்த குற்றங்களுக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். குற்றங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். என்னை நம்பி சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பு கொடுத்திருக்கிற அரசுக்கும், முதலமைச்சருக்கும் நல்ல பெயர் கிடைக்கும் வகையில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

* சட்டம் ஒழுங்கில் சிறப்பான பணி
சென்னை பெருநகர 110வது போலீஸ் கமிஷனராக நேற்று பதவியேற்றுக்கொண்ட கூடுதல் டிஜிபி அருண் சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை அடுத்த சின்ன திருப்பதியை சேர்ந்தவர், சென்னையில் மெக்கானிக் இன்ஜினியரிங் முடித்தவர். ஐபிஎஸ் அதிகாரியாக 1998ல் சேர்ந்தார். 1998ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பயிற்சி பெற்றார். பின்னர் 2000ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை நாங்குநேரி, தூத்துக்குடி கூடுதல் எஸ்பியாக பணியாற்றினார். பின்னர் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று, கரூர், கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து, சென்னை அண்ணாநகர், மவுன்ட் துணை கமிஷனர், சிபிசிஐடி, திருப்பூர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆகிய பதவிகளில் பணியாற்றினார். 15வது பட்டாலியன் கமான்டன்ட்டாக நியமிக்கப்பட்டார். பின்னர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, 2012ம் ஆண்டு தலைமையிட டிஐஜி, வடசென்னை போக்குவரத்து இணை கமிஷனர், தென் சென்னை சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர், திருச்சி சரக டிஐஜியாக பணியாற்றினார். 2016ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று திருச்சி கமிஷனராகவும், தொடர்ந்து சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனராகவும், வடசென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர், நிர்வாகப் பிரிவு ஐஜி, பின்னர் மீண்டும் திருச்சி கமிஷனர், போலீஸ் பயிற்சிக் கல்லூரி ஐஜியாக பணியாற்றினார்.

பின்னர் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, 2023ம் ஆண்டு ஜனவரியில் சிவில் சப்ளை சிஐடி ஏடிஜிபியாகவும், ஆவடி போலீஸ் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டு ஓராண்டு பணியாற்றினார். அவரது பணிக்காலத்தில் மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பணியில் சிறப்பாக பணியாற்றியதால், தமிழக முதல்வரால் சென்னை போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Police Commissioner ,Arun Kalal ,DGP ,Arun ,Vepperi, Chennai ,Prem Anand Sinha ,Asra Garg ,Kapil Kumar Sarathkar ,Transport Commissioner ,Sudhakar ,
× RELATED பணியின்போது உயிரிழந்த உதவி கமிஷனர்...