சென்னை: நீரிழிவு பெண் நோயாளிகளுக்கு இருக்கும் அதிக அளவு சர்க்கரை, புற்றுநோய் செல்களை உருவாக்கும் என ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் நீரிழிவு நோயின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோய் சிறுநீரகம் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. அத்துடன், தற்போது நீரிழிவு நோயால் புற்றுநோய் வருவதற்கும் அதிக வாய்ப்புள்ளது என சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு, கருப்பை புற்றுநோய் நோயாளிகளின் அதிகரிப்புக்கும் இடையே உள்ள தொடர்பை குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின்படி, நீரிழிவு நோய் பெண்களின் உடலில் உள்ள பல ஹார்மோன்களின் சமநிலை இன்மையை ஏற்படுத்துகிறது. ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக, உடலில் அதிகப்படியான இன்சுலின் உற்பத்தி செய்யப்படுகிறது. பெண் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிப்பதால், ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியும் வேகமாக அதிகரிக்கிறது. சர்க்கரை நோயினால் பெண்களின் உடலில் ஏற்படும் இந்த மாற்றங்களால் கருப்பை செல்கள் வேகமாக வளர ஆரம்பித்து கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோய் உள்ள நீரிழிவு நோயாளியின் உயர் ரத்த சர்க்கரை அளவு எண்டோமெட்ரியல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பரவலுக்கு வழிவகுக்கிறது. இதனால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இரு மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில், அதிகப்படியான கொழுப்பு மற்றும் நீரிழிவு காரணமாக உடலில் ஏற்படும் அழற்சியின் காரணமாக புற்றுநோய் செல்கள் உருவாகத் தொடங்குகிறது என தெரியவந்துள்ளது. இதனை தடுக்க உடல் எடையை பராமரிக்க வேண்டும், சமச்சீரான உணவை உண்ண வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
The post நீரிழிவு பெண் நோயாளிகளுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.