×
Saravana Stores

ஜார்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி: எதிர்கட்சிகள் வெளிநடப்பு

ராஞ்சி: ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில்காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளின் கூட்டணியான ஜார்கணட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில் நிலமோசடியுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இதனையடுத்து ஜனவரி மாதம் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் உடனடியாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, ஜூன் 28ம் தேதி சிறையில் இருந்து ஹேமந்த் விடுவிக்கப்பட்டார். மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்த சம்பயி சோரன் ராஜினாமா செய்ததை அடுத்து மீண்டும் ஹேமந்த் ஜார்கண்ட் முதல்வரானார். சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 81 இடங்களில் மக்களவை தேர்தலுக்கு பின் ஜேஎம்எம் கூட்டணியின் பலம் 45ஆக குறைந்தது. ஜேஎம்எம் கட்சிக்கு 27 எம்எல்ஏக்கள், காங்கிரசுக்கு 17, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 1 மற்றும் பாஜகவுக்கு 24 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இதனை தொடர்ந்து ஜார்கண்ட் சட்டப்பேரவையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசின் மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தம் 75 எம்எல்எக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றனர். சுயேட்சை எம்எல்ஏசார்யூ ராய் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஜார்கண்ட்டில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெறுவதற்கு 42 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஹேமந்த் அரசுக்கு 45 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். பாஜ எம்எல்ஏக்கள் மற்றும் ஏஜேஎஸ்யூ எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றிப் பெற்றது. இதனை தொடர்ந்து பேசிய முதல்வர் ஹேமந்த் சோரன், ‘‘ஆளும் கூட்டணியின் ஒற்றுமை மற்றும் பலத்தை அனைவரும் மீண்டும் பார்த்துள்ளனர்.சபாநாயகர் மற்றும் அனைத்து கூட்டணி எம்எல்ஏக்களுக்கும் நன்றி. பாஜவிடம் மாநிலத்திற்கான எந்த திட்டமும் இல்லை” என்றார்.

* 11 அமைச்சர்கள் பதவியேற்பு
ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்ற பின்னர் 11 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். ராஜ்பவனில் நடந்த விழாவில் சம்பாய் சோரன் உட்பட 11 பேருக்கு ஆளுநர் ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ஹேமந்த் மற்றும் ஜேஎம்எம் மூத்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

The post ஜார்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி: எதிர்கட்சிகள் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : Hemant Soran ,Jharkhand ,Ranchi ,Mukti Morcha ,Hemant Soran government ,Jharkhand Assembly ,Congress ,Rashtriya Janata Dal ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின்...