சென்னை: நீட் தேர்வு குளறுபடியால் பி.இ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மே மாதம் 6ம் தொடங்கியது. அதன்படி, அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக வளாக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக் கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் இடங்களில் சேர்வதற்காக விண்ணப்பதாரர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர். விண்ணப்ப பதிவானது ஜூன் 11ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இதில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் விண்ணப்ப கட்டணத்தையும், ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 853 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்திருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கான தரவரிசை பட்டியல் நாளை (ஜூலை 10) வெளிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நீட் தேர்வில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகள் காரணமாக நேற்று நடந்த விசாரணையில் ஒன்றிய அரசை சரமாரியாக கேள்விகள் கேட்ட உச்ச நீதிமன்றம், உரிய அறிக்கையை சமர்ப்பிக்கக் கோரி வழக்கின் விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தது. எனவே மருத்துவக் கலந்தாய்வு தள்ளிப்போவதால் இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நாளைய தினம் இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் வெளியாகுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது மாணவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
The post நீட் தேர்வு குளறுபடி எதிரொலி பி.இ தரவரிசை பட்டியல் வெளியாவதில் சிக்கல்: மாணவர்கள் கவலை appeared first on Dinakaran.