ராசிபுரம்: ராசிபுரம் அருகே நேற்று மதியம் விவசாயி பையில் எடுத்து சென்ற 500 ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறியது. இதனை பார்த்த பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை சேகரித்து அவரிடம் கொடுத்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனி நாயக்கர்(69), விவசாயி. இவர் கால்நடைகளை விற்ற பணத்தை, வங்கியில் செலுத்துவதற்காக பையில் எடுத்துக்கொண்டு நேற்று மதியம் வீட்டில் இருந்து புறப்பட்டார். ராமநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்த அவர், டூவீலரில் சென்ற வாலிபரிடம், லிப்ட் கேட்டு ஏறியுள்ளார். கோனேரிப்பட்டி ஏரிக்கரை பகுதியில் சென்றபோது, டூவீலரில் தொங்க விட்டிருந்த பையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறியபடியே சென்றது. இதனை பார்த்த சிலர், டூவீலரை முந்தி சென்று தெரிவித்துள்ளனர்.
உடனே முதியவர் டூவீலரை நிறுத்த சொல்லி, சாலையில் கிடந்த நோட்டுக்களை பொறுக்கினார். பலரும் பணத்தை சேகரித்து முதியவரிடம் கொடுத்தனர். இதனை பெற்றுக்கொண்ட அவர், கால்நடைகள் விற்ற ரூ.2 லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்கு 4 கட்டுகள் கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் கொண்டு செல்வதாக கூறினார். மேலும், அங்கு சிதறிக்கிடந்த ரூ.18 ஆயிரத்தை பொதுமக்கள் சேகரித்து கொடுத்தனர். இதில் பல நோட்டுகள் காற்றில் பறந்திருக்கலாம் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். அதை கேட்ட அவர், யாருக்காவது பணம் வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள் என சேகரித்து கொடுத்தவர்களை பார்த்து அப்பாவித்தனமாக கூறினார். அவரிடம் எவ்வளவு பணம் குறைவாக இருக்கிறது என கேட்டதற்கு, இருக்கிற பணம் போதும். போன பணம் போயிட்டு போகுது எனக்கூறி விட்டுச் சென்றார். ஏற்கனவே உசிலம்பட்டியில் சாலையில் பறந்து விழுந்த 500 ரூபாய் நோட்டுகளை மக்கள் எடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.
The post விவசாயி பையில் கொண்டு சென்ற ரூ.500 நோட்டுகள் சாலையில் சிதறியது: பொதுமக்கள் சேகரித்து ஒப்படைத்தனர் appeared first on Dinakaran.