×

உரிய அனுமதியின்றி வாடகைக்கு பயணிகளை ஏற்றிய சொகுசு கார் பறிமுதல்

திருத்தணி: உரிய அனுமதியின்றி முறைகேடாக பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு காரை பொன்பாடி போக்குவரத்து சோதனைச்சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார். போக்குவரத்து அனுமதி பெறாத சொந்த வாகனங்கள் வாடகைக்கு இயக்கப்படுவது குறித்து டாக்சி மற்றும் வேன் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் புகார் செய்திருந்தனர். இதை தொடர்ந்து, போக்குவரத்து ஆணையர் உத்தரவின்பேரில் திருத்தணி அருகே சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர எல்லை பகுதியில் உள்ள பொன்பாடி சோதனைச்சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது சென்னையிலிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி நோக்கி சென்ற ஒரு சொகுசு காரை நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது, முறைகேடாக அனுமதியின்றி சொந்த வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் சென்றது உறுதிப்படுத்தப்பட்டு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என்றும், மேலும் பிற மாநில வாகனங்கள் தற்காலிக அனுமதி சீட்டு, வரி செலுத்தி பயணிக்க வேண்டும் என்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கேட்டுக்கொண்டார்.

The post உரிய அனுமதியின்றி வாடகைக்கு பயணிகளை ஏற்றிய சொகுசு கார் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Ponpadi ,Taxi and Van Owners Association ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் வள்ளி...