×

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு: செங்கல்பட்டு கலெக்டர் தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் வளர் இளம் பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு மற்றும் உயர்கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, இளவயது கர்ப்பத்தினால் ஏற்படும் தீமைகள் உள்ளிட்டவை குறித்து விழப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் வழங்கும் விதமாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து செயல்படுத்தும் “எனக்குள் நான்” எனும் சிறப்பு நிகழ்ச்சியினை கலெக்டர் அருண்ராஜ் நேற்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 70 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளிடம் அவர்கள் சமுதாயத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் எதிர்கால குறிக்கோள்கள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் பதின்ம பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் மாற்றங்கள், குழந்தை திருமணம், ஊட்டச்சத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கான அரசு நலத் திட்டங்கள், சைபர் குற்றம், காவல் உதவி செயலி, போதை தடுப்பு, சுற்று சுழல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சி குறித்து மாணவ மாணவிகள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட முதன்மை அலுவலர் கற்பகம், மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதாபர்வின், மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் சங்கீதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு: செங்கல்பட்டு கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Department ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இரவு 7 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு