திருப்போரூர்: ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது ஓ.எம்.ஆர். சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். குறிப்பாக கேளம்பாக்கம் மற்றும் திருப்போரூர் இடையே உள்ள தையூர் ஏரி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளுள் ஒன்றாகும். இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் ஓ.எம்.ஆர். சாலையின் பல்வேறு இடங்களில் சாலையைக் கடந்து சென்று பக்கிங்காம் கால்வாயை சென்றடைகிறது. பழங்காலங்களில் உருளையான குழாய்கள் புதைக்கப்பட்டு அதன் மூலம் சிறு பாலங்கள் அமைக்கப்பட்டன.
இந்த பாலங்கள் நாளடைவில் சேதமடைந்து ஆங்காங்கே உடைந்து மண் சேர்ந்து தண்ணீர் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ஏரியின் உபரி நீர் ஓ.எம்.ஆர். சாலையின் மற்றொரு பக்கத்திற்குச் செல்லாமல் சாலையை மூழ்கடித்துச் சென்றது. இதனால் தண்ணீரின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தற்போது இப்பிரச்னைக்கு மாற்று வழி காணப்பட்டுள்ளது.
ரெடிமேட் முறையில் சிறு பாலம் அமைப்பதற்கான மோல்டிங் உருவாக்கப்பட்டு அவை கொண்டு வரப்படுகின்றன. இவை கிரேன் இயந்திரம் மூலம் வெள்ள நீர் வெளியேறும் பகுதிகளில் பொருத்தப்படவுள்ளன. இதன் மூலம் நீண்ட நாட்கள் பள்ளம் தோண்டி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டால் ஒரு ஆள் உள்ளே நுழைந்து வெளி வரும் அளவிற்கு அகலமாகவும், உயரமாகவும் அமைக்கப்படுவதால் பழுது நீக்கும் பணியை எளிதாகவும் செய்ய முடிகிறது. நெடுஞ்சாலைத்துறையின் இப்பணிக்கு பொதுமக்கள் பரவலாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.
The post ஓ.எம்.ஆர். சாலையில் நவீன முறையில் கான்கிரீட் பாலங்கள்: எளிதாக பழுது நீக்கும் வகையில் அமைகின்றன appeared first on Dinakaran.