தர்பங்கா: ஒன்றிய ஆசிரியர் தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் 2 பெண்கள் உட்பட 12 பேரை பீகார் போலீசார் கைது செய்துள்ளனர். ஒன்றிய ஆசிரியர் தகுதி தேர்வு(சிடெட்) நேற்றுமுன்தினம் நடந்தது. இதில்,பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தின் பல மையங்களில் நடந்த தேர்வில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடந்துள்ளன. தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் லகேரிசராய் போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட மையத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
சதர் போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் 2 பேர்,பகதுார்பூர் போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் ஒருவர் என மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் குறித்து தர்பங்கா சீனியர் எஸ்பி ஜகுநாத் ரெட்டி கூறுகையில்,‘‘ தேர்வு மையங்களில் தேர்வர்களின் பயோமெட்ரிக் கைரேகை ஸ்கேன் மூலம் ஆள்மாறாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மோசடிகளில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடக்கிறது’’ என்றார்.
The post ஒன்றிய ஆசிரியர் தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம்: பீகாரில் 12 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.