×

ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா பதிலடி; அடுத்த 3 போட்டியிலும் வெற்றியை தொடர போராடுவோம்: கேப்டன் சுப்மன் கில் பேட்டி

ஹராரே: சுப்மன்கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஹராரே மைதானத்தில் 5 போட்டி கொண்ட டி.20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் 2வது போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன் குவித்தது. அபிஷேக் சர்மா 47 பந்தில் 7 பவுண்டரி, 9 சிக்சருடன் 100 ரன் விளாசினார். ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்தில், 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 77, ரிங்குசிங் 22 பந்தில், 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 48 ரன் எடுத்து களத்தில் இருந்தனர். பின்னர் களம் இறங்கிய ஜிம்பாப்வே 18.4 ஓவரில் 134 ரன்னுக்கு சுருண்டது. இதனால் 100 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. வெற்றிக்கு பின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், “வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிரடி கம்பேக்கை கொடுத்துள்ளோம்.

பவர் பிளேவில், பந்தை அடிக்கவே சிரமமாக இருந்தது. அந்த சமயத்திலும் அபிஷேக் சர்மா, ருதுராஜ் சிறப்பாக செயல்பட்டனர். இதனால்தான் வெற்றியைப் பெற முடிந்தது. இன்னமும் 3 போட்டி இருக்கிறது. தற்போது வென்றது போலவே, அடுத்தடுத்த போட்டிகளில் வெல்ல கடுமையாக போராடுவோம்’’ என்றார். ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா கூறுகையில், “உலகச் சாம்பியன் உலக சாம்பியன் போல் விளையாடியது. கேட்ச்களை தவற விட்டது எங்களுக்கு வேதனையை கொடுத்தது. இந்த பிட்ச்சில் 200 ரன் அடிக்க முடியும் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் இந்தியா அதையும் தாண்டி 30 ரன் எடுத்தது’’ என்றார். தொடர் 1-1 என சமனில் இருக்க 3வது போட்டி நாளை மறுநாள் நடக்கிறது. கடைசி 3 போட்டிக்காக ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம்துபே அணியில் இணைந்துள்ளனர்.

 

The post ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா பதிலடி; அடுத்த 3 போட்டியிலும் வெற்றியை தொடர போராடுவோம்: கேப்டன் சுப்மன் கில் பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Zimbabwe ,Subman Gill ,Harare ,Submangil ,Dinakaran ,
× RELATED வெற்றி தரும் வெற்றி விநாயகர்