×

திருப்போரூர் பகுதிகளில் குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் கும்பல்: தடுக்க வலியுறுத்தல்

திருப்போரூர்: திருப்போரூர் முருகன் கோயில் உள்பட சுற்றுவட்டார குழந்தைகளை ஒரு நாடோடி கும்பல் பிச்சை எடுக்க வைத்து சம்பாதித்து வருகிறது. இவற்றை தடுக்க போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக செவ்வாய் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கிருத்திகை போன்ற பல்வேறு விசேஷ தினங்களில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும். இங்கு வரும் பக்தர்ளை மையமாக வைத்து, கோயிலின் தெற்கு மற்றும் கிழக்கு வாசல் பகுதிகளில் ஏராளமான பிச்சைக்காரர்கள் அமர்ந்து, பக்தர்களிடம் பிச்சை வாங்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருப்போரூர் அருகே தண்டலம் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு நாடோடி கும்பல் தங்கியுள்ளது.

இக்கும்பலை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள், தங்களுடன் ஒரு கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு பக்தர்களிடம் கெஞ்சுவது போல் பிச்சை எடுத்து வருகின்றனர். இந்த சிறுவர்-சிறுமிகள் கைக்குழந்தையுடன் திருப்போரூர் முருகன் கோயில், பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் சட்டையை பிடித்து இழுத்து, கிழிந்த உடை மற்றும் காய்ந்த தலைமுடியுடன் பிச்சை எடுத்து வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் அக்கும்பலை சேர்ந்த ஒருவர், சிறுவர்-சிறுமிகள் பிச்சை மூலம் சேகரித்த பணத்தை மொத்தமாக வாங்கி செல்கிறார்.

இவ்வாறு பிச்சை எடுக்கும் சிறுவர்-சிறுமிகள் உணவு மற்றும் தின்பண்டங்கள் வாங்க மறுத்து, பணத்தை மட்டுமே மையமாக வைத்து பிச்சை எடுக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோரிடம் விளக்கி கூறினாலும், அவர்கள் குழந்தைகளை படிக்க அனுப்புவதற்கு பதிலாக மீண்டும் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதையே வாடிக்கையாக செய்து வருகின்றனர். எனவே, திருப்போரூர் பகுதிகளில் அவலமான நிலையில் கைக்குழந்தையுடன் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் மற்றும் அவர்களை வைத்து பணம சம்பாதிக்கும் கும்பல் குறித்து மாவட்ட நிர்வாகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுவினர் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

The post திருப்போரூர் பகுதிகளில் குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் கும்பல்: தடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tirupporur ,Thiruporur ,Murugan Temple ,Tirupor Murugan ,
× RELATED வாழப்பாடி முருகன் கோயில் அருகே மலையேறிய சிறுமி தவறி விழுந்து படுகாயம்..!!