*குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
ஏலகிரி : தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறையால் நேற்று ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,700 மீட்டர் உயரத்தில் நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்டு இயற்கை நிறைந்த அமைதியான சூழலில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வரும் ஏலகிரி மலை 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது.
அதில் 10வது கொண்டை ஊசி வளைவில் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி சமவெளிகளை காண பார்வை மையம் அமைந்துள்ளது. இதில், இரவு நேரங்களில் காணும்போது திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி நகரங்கள் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது போல் காட்சியளிப்பது சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றன.
அதேபோல் ஏலகிரி மலையில் அரசு மற்றும் தனியார் சுற்றுலா தலங்களான படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன. அதேபோல் ஏலகிரியில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் உள்ளதால், விடுமுறை நாட்களில் ஏராளமானோர் வந்து விடுதிகளில் தங்கி அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு செல்கின்றனர்.
இந்நிலையில், தொடர்ந்து சனி, ஞாயிறு என 2 நாட்கள் தொடர் விடுமுறை தினம் என்பதால் நேற்று ஏலகிரியில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். அவர்கள் படகு இல்லங்களில் படகு சவாரி செய்ய வரிசைகளில் நின்று குடும்பத்துடனும், நண்பர்களுடனும் படகு சவாரி செய்தனர். நிலாவூர் பண்டேரா பார்க்கில் அரிய வகை வெளிநாடு பறவைகளுக்கு உணவு கொடுத்தும், புகைப்படங்கள் எடுத்தும் பறவைகளோடு விளையாடி செல்பி எடுத்து கொண்டனர். மேலும், பாண்டா செல்பி பார்க்கில் விதவிதமான உருவ பொம்மைகள் அருகில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
செயற்கை நீரூற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வேண்டும்
ஏலகிரி மலையில் அரசு சுற்றுலா தலமான இயற்கை பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்று, (மியூசிக்கல் நீர் நடனம்), நிலாவூர் படகு இல்லம் ஆகியவை பயனற்ற நிலையில் சிதலமடைந்து காணப்படுகிறது. இதனால் இயற்கை பூங்காவில் அழகை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் செயற்கை நீரூற்று காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கன்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த அரசு சுற்றுலா தலங்களை சீரமைத்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.