*எக்டேருக்கு 1500 கிலோ விதை போதுமானது
*20 டன் வரை மகசூல் கிடைக்கும்
தோகைமலை : கடவூர், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் சின்னவெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எக்டேருக்கு 1500 கிலோ விதை போதுமானது, 20 டன் வரை மகசூல் கிடைக்கும்.கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை வட்டார பகுதிகளில் பல்வேறு விதமான விவசாய பயிர்கள் செய்து வரும் நிலையில் சின்னவெங்காயம் சாகுபடியை ஒரு சில விவசாயிகள் ஆர்வமுடன் செய்து வருகின்றனர்.
சின்னவெங்காயம் என்பது ஒரு வெப்ப மண்டல பயிராகும். நன்கு தண்ணீர் தேங்காத வளமான இரு மண்பாங்கான நிலம் சாகுபடிக்கு உகந்தது ஆகும். கோ 1, 2, 3, 4, 5 மற்றும் எம்டி 1 ஆகிய ரகங்கள் சாகுபடி முறைக்கு ஏற்று என்று தெரிவத்து உள்ளனர்.சின்னவெங்காயம் சாகு படி செய்வதற்கு ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் சாகுபடியை தொடங்கலாம். மண்ணின் கார அமிலம் தன்மை6 முதல் 7 க்குள் இருக்க வேண்டும். நன்கு தண்ணீர் தேங்காத செம்மண் நிலம் அமைந்தால் சாகுபடிக்கு சிறப்பாக இருக்கும்.
ஒரு எக்டேருக்கு சுமார் 1500 கிலோ விதை வெங்காயம் தேவைபடும். விதை வெங்காயத்தை பார் பாத்தியில் 10 செ.மீ இடைவெளியில் இருபுறமும் நட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதனை தொடர்ந்து 3 நாட்கள் கழித்து உயிர் தண்ணீர் பாய்ச்சிய பிறகு 5 முதல் 7 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும்.வளர்ச்சி பருவத்தில் அமிர்தகரைசல், பஞ்சகாவ்யா, தேங்காய் மோர் கரைசலில் ஏதாவது ஒன்றை 20 நாட்கள் இடைவெளியில் தெளித்தால் நல்லது.
அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்பு 100 லிட்டருடன் 5 லிட்டர் புளித்த மோரை கரைத்து தெளித்தால் காய் திரட்சியாக நல்ல திறத்துடன் இருப்பதோடு எடையும் அதிகமாக இருக்கும். சாகுபடி செய்த பருவகாலம் முடியும் தருவாயில் வாயலில் 75 சதவீதம் இலைகள் காய்ந்துவிட்டால் பயிர் முதிர்ச்சி அடைந்து இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அறுவடை செய்யும் 7 நாட்களுக்கு முன்பு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் கொத்து அல்லது மண் தோண்டி மூலம் தோண்டி வேர் மற்றும் இலைகளை பறித்து சுத்தம் செய்தல் வேண்டும். அதன் பின்பு நிழலில் காயவைத்து வெங்காயத்தை விற்பனைக்காக பாதுகாக்க வேண்டும். மேற்படி முறைகளில் கடைபிடித்து சாகுபடி செய்தால் ஒரு எக்டேருக்கு 15 முதல் 20 டன் வரை சின்னவெங்காயம் மகசூல் கிடைக்கும் என்றும் முன்னோடி விவசாயிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
The post கடவூர், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் சின்னவெங்காயம் சாகுபடி தீவிரம் appeared first on Dinakaran.