×

வேலூர் மாநகராட்சியில் 55வது வார்டில் பைப்லைன் உடைந்து 15 நாளாக வீணாகும் குடிநீர்

*சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வேலூர் : வேலூர் மாநகராட்சி 55வது வார்டில் பைப்லைன் உடைந்து நாள்தோறும் தண்ணீர் வீணாகி வருகிறது. உடைந்த பைப்லைன்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், வீடுகளில் குடிநீர் விநியோகம் செய்ய குழாயில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் உள்ளிட்ட பணிகளுக்காக 60 வார்டுகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்கள் சரிவர மூடாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்ல பொதுமக்கள் அவதியடைகின்றனர். அதேபோல் பல இடங்களில் குடிநீர் பைப்லைன் உடைந்து, தினந்தோறும் தண்ணீர் சாலையில் வீணாகி ஓடுவதால், சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. வீணாகும் தண்ணீர் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், சரி வர நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், வேலூர் மாநகராட்சி 55வது வார்டு பலவன்சாத்து பகுதியில் உள்ள ஆசிரியர் சுப்பிரமணி தெருவில் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக பாதாளா சாக்கடை திட்ட பணிகள் தொடங்கியது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்ட 2 இடங்களில் ஒனேக்கல் கூட்டு குடிநீர் திட்ட பைப்லைன் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக பைப்லைன் உடைந்து, ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி சாலையில் ஓடுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘மாநகராட்சி பகுதியில் பல்வேறு திட்டப்பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. அப்படி தோண்டும் போது பைப்லைன் உடைந்து, தண்ணீர் வீணாகி வருகிறது. உடனடியாக பைப்லைனை சீரமைப்பதில்லை. இதனால் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வீணாகிறது. எனவே உடைந்த பைப்லைனை உடனடியாக சீரமைக்க வேண்டும்’ என்றனர்.

The post வேலூர் மாநகராட்சியில் 55வது வார்டில் பைப்லைன் உடைந்து 15 நாளாக வீணாகும் குடிநீர் appeared first on Dinakaran.

Tags : Vellore Corporation ,Vellore ,
× RELATED பாதாள சாக்கடை பணியால் அரசு பஸ் மாற்று...