×

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹16 கோடியில் பழைய பஸ் நிலையம் விரிவாக்கம்

*ஓடம்போக்கி பாலம் நடைபாதை அகற்றம்

*பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

திருவாரூர் : கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியில் பழைய பஸ் நிலையம் விரிவாக்கம் காரணமாக ஓடம்போக்கி பாலத்தின் நடைபாதை அகற்றப்பட்டு வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகராட்சி பகுதியில் கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 58 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

அதன் பின்னர் தற்போது 13 ஆண்டு காலத்தில் இந்த மக்கள்தொகை என்பது அதிகரித்துள்ள நிலையில் மாவட்டத் தலைநகராக திருவாரூர் இருந்து வருவதால் இங்குள்ள கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் என அரசின் அனைத்து துறை அலுவலகங்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி தமிழ்நாடு மத்திய பல்கலைகழகம் போன்றவை இருந்து வருவதன் காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த நகரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூரில் இருந்து வந்த பஸ் நிலையம் கடந்த 48 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. அப்போது இருந்து வந்த மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் பஸ்கள் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில் இடநெருக்கடி காரணமாகவும், பஸ்களின் எண்ணிக்கை உயர்வு காரணமாகவும் புதிய பஸ் நிலையம் கட்ட வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று கடந்த தி.மு.க ஆட்சி காலத்தின் போது 2010ம் ஆண்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக திருவாரூர் நகராட்சி 30வது வார்டுக்குட்பட்ட தியாகபெருமாநல்லூர் பகுதியில் 18 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு பஸ் நிலையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி வீடியோ கான்பிரன்சிங் முறையில் இந்த பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் பழைய பஸ் நிலையத்தின் அருகில் ரயில் நிலையம் மற்றும் வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள், திரையரங்குகள் போன்றவை இருந்து வருவதன் காரணமாக புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டாலும் தற்போது வரையில் பழைய பஸ் நிலையத்தையே பொது மக்கள் மற்றும் பயணிகள் அதிகளவில் பயன்படுத்தும் நிலை இருந்து வருகிறது. இதனால் பஸ் நிலையத்தை மேம்படுத்திட வேண்டும் என பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திமுக தலைமையிலான அரசு பொறுப்பே ற்ற பின்னர் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைமுன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி மாநில முழுவதும் இந்த கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2021-22ம் நிதியாண்டில் மட்டும் ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு பணிகள் நடைபெற்றது.

2022,23 மற்றும் 2023,24 என தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி திருவாரூர் நகராட்சி பகுதியில் இந்த பழைய பஸ் நிலையத்தை மேம்படுத்தும் பணிக்காக கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.16 கோடியே 30 லட்சம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இந்நிலையில் இதற்கான பணிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகின்றன. பழைய பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து என்பது ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஓடம்போக்கி ஆற்றின் பழைய பாலத்தில் இருந்து வரும் நடை பாதையை அகற்றும் பணி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. எனவே இந்த பணியை விரைந்து முடித்து சாலை பராமரிப்பு பணியை முடித்திட வேண்டும் என நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹16 கோடியில் பழைய பஸ் நிலையம் விரிவாக்கம் appeared first on Dinakaran.

Tags : Odamboki Bridge ,Thiruvarur ,Odambokki Bridge ,Dinakaran ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி