×

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் பயணம்: முன்னதாக அசாம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார்

டெல்லி: இன்று மணிப்பூர் செல்ல உள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அதற்கு முன்னதாக அசாம் மாநிலத்துக்கு சென்று கலவரத்தால் இடம்பெயர்ந்து அங்கு முகாமில் தங்கியுள்ள மக்களை சந்திக்க உள்ளார். மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக இரு சமூகத்துக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் இயல்புநிலை முழுமையாக திரும்பவில்லை. அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நிகழ்கின்றன.

கடந்த மாதம் மணிப்பூரில் ஜிரிபம் என்ற இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் எல்லையில் உள்ள ஆற்றை கடந்து அசாம் மாநிலத்தில் முகாமிட்டனர். இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்காக இன்று மணிப்பூர் செல்லும் ராகுல் காந்தி முன்னதாக அசாம் மாநிலம் செல்ல உள்ளார். இன்று காலை 9 மணிக்கு அசாம் மாநிலம் செல்லும் ராகுல் காந்தி அங்கிருந்து லக்கிம்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார்.

பின்னர் கடந்த மாதம் வன்முறை ஏற்பட்ட ஜிரிபம் பகுதிக்கு செல்லும் ராகுல் அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிறகு மணிப்பூர் செல்ல உள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிய உள்ளார்.

 

The post எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் பயணம்: முன்னதாக அசாம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Manipur ,Assam ,Delhi ,Dinakaran ,
× RELATED எளிய மக்களுடன் ராகுல் காந்தி..!!