×

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி அஞ்சலி

சென்னை: படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அக் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். வெட்டிக் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை பெரம்பூரில் தனியார் பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி நேற்று காலை விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.

அவருடன் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த் உள்ளிட்டோரும் வந்தனர். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை மாயாவதி சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மலர் வளையம் வைத்தார். பின் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி, கட்சித் தொண்டர்களிடையே மாயாவதி பேசினார். அவர் பேசுகையில், ‘‘ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிகழ்வு ஒட்டுமொத்த தலித் மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டம் ஒழுங்கு தொடர்பாக மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

உண்மையான குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே கொலைக்கான காரணம் என்ன என்பது தெரிய வரும். அப்படி செய்தால் மட்டுமே இது தலித் மக்களுக்கு கிடைக்கப் பெற்ற நியாயமாக இருக்கும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். கட்சி பொறுப்பில் இருக்கக்கூடிய நபர்களும் தாமாக சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. சட்டத்தை மதிக்க வேண்டும். கட்சியினரும் மக்களும் தைரியமாக இருக்க வேண்டும். அவருடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறேன்.

மக்களுக்கு ஆம்ஸ்ட்ராங் நிறைய உதவிகளை செய்திருக்கிறார். அவர் கொல்லப்பட்டது கட்சி உறுப்பினர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய இழப்பை தந்திருக்கிறது’’ என பேசினார். ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு மாயாவதி வந்தபோது, அவருடன் விசிக தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் வந்திருந்தனர். அப்போது பேசிய திருமாவளவன், இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டியவர் ஆம்ஸ்ட்ராங். அவரை இழந்தது சகித்துக் கொள்ள முடியாதது.

இந்த கொலை கோழைத்தனமான வன்முறை. ஒரு அரசியல் கட்சி தலைவர் பட்டப்பகலில் இவ்வளவு கொடுமையாக கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது அதிர்ச்சியை தருகிறது. அவரது இழப்பு பகுஜன் சமாஜ் கட்சிக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தலித் அரசியலுக்கும் பேரிழப்பாகும். உண்மையான கொலையாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அதனால்தான் மாயாவதி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்கிறார்.

அதிலும் தொடர்ந்து தலித் இயக்கத்தை சார்ந்தவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இதன் பின்னணியில் இருப்பது யார், கூலிப்படையை ஏவியவர்கள் யார் என்பதை தமிழக அரசு விரைவில் கண்டறிய வேண்டும் என்று திருமாவளவன் பேசினார். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு ஜவாஹிருல்லா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

The post பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Mayawati ,Bahujan Samaj ,state ,president ,Armstrong ,CHENNAI ,Bahujan Samaj Party Tamil Nadu ,Perampur, Chennai ,
× RELATED அரசியலில் இருந்து ஓய்வுபெறும் பேச்சுக்கே இடமில்லை: மாயாவதி திட்டவட்டம்