×

வரும் 23ம் தேதி தாக்கல் செய்யவுள்ள ஒன்றிய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி கிடைக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சென்னை: ஒன்றிய அரசு வரும் 23ம் தேதி தாக்கல் செய்யவுள்ள பொது பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒன்றிய அரசின் 2024-25ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் வரும் 23ம் தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசவுள்ளார். இந்த பொது பட்ஜெட்டில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு அதிக எம்பிக்களை கொடுத்த பீகார், ஒடிசா, மத்தியபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேபோல், கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆந்திராவிற்கு சிறப்பு திட்டங்களை ஒன்றிய பாஜ அரசு அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக ரயில்வே சார்ந்த திட்டங்கள், புதிய ரயில்கள் அம்மாநிலங்களுக்கு அதிக அளவு கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.  பொதுவாக ரயில்வேத்துறையை பொருத்தளவில் பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்ட பின், பெரிய அளவில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

ஆனால், செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் அரசு வழங்கி வருகிறது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், தெற்கு ரயில்வேயில் தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 4 கோட்டங்களுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கப்பட்டது.
மொரப்பூர்-தர்மபுரி இடையே 36 கிலோ மீட்டருக்கு புதிய அகல ரயில்பாதை அமைக்க ரூ.115 கோடியும், ஈரோடு-பழனி இடையே 91 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய அகல ரயில்பாதை அமைக்க ரூ.100.10 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதேபோல், சின்னசேலம்-கள்ளக்குறிச்சி அகல ரயில்பாதை திட்டம், நாகர்கோவில்-மதுரை இருவழிப்பாதை திட்டம் போன்றவற்றிக்கும் நிதி ஒதுக்கீடு கிடைத்தது. அந்த இடைக்கால பட்ஜெட் போல், நடப்பாண்டின் பொது பட்ஜெட்டிலும் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக அயோத்தியில் ராமர் கோயில் அமைந்ததால், அங்குள்ள ரயில்வே ஸ்டேஷன் மற்றும் வழித்தடங்களை மேம்படுத்த அரசு முனைப்பு காட்டியுள்ளது.

அதுபோல தமிழகத்தில் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தவும், ராமேஸ்வரத்திற்கு அதிகபடியான ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தென் மாவட்டமான தூத்துக்குடியில் இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அங்குள்ள ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தி, திருச்செந்தூருக்கான ரயில்வே திட்டங்களை ரயில்வே நிர்வாகம் வகுக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது.

அதேபோல், தமிழகத்தில் வளர்ந்து வரும் நகரங்களான திருச்சி, சேலத்தை மையமாக கொண்டு புதிய ரயில்வே திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர ஒன்றிய அரசுக்கு கோரிக்கைகள் சென்றுள்ளன. அதாவது, சேலத்தில் ரயில்வே கோட்ட தலைமையகம் இருந்தும், இங்கிருந்து முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் இல்லை. இதற்கு முக்கிய காரணம், சேலத்தில் ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை இல்லாததாகும்.

அதனால், சேலம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் முதலில் ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனையை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அந்த அறிவிப்பு வருமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக போதிய நிதி கிடைக்காமல் இருக்கும் தர்மபுரி-மொரப்பூர் ரயில் பாதை திட்டம், சேலம்-நாமக்கல்-கரூர் உள்பட 10க்கும் மேற்பட்ட இருவழிப்பாதை திட்டம் ஆகியவற்றிற்கு அதிகளவு நிதியை இப்பட்ஜெட்டில் ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யுமா? என ரயில் பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தமிழ்நாட்டின் சில ஊர்களுக்கு ரயில் இணைப்பு இன்னும் சரிவர இல்லாமல் இருக்கிறது. இதில், முதன்மை இடத்தில் புதுக்கோட்டை மாவட்டம் உள்ளது. அதனால், சரியான முறையில் ரயில் பாதைகள் இல்லாத நகரங்களுக்கு புதிய ரயில் வழித்தடம் அமைக்க திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். இதுவும் தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. வழக்கமாக ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு எந்தவொரு சிறப்பு திட்டமும் வந்ததில்லை. அந்த வரலாற்றை மாற்றி மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பாஜ அரசு நிறைவேற்றுமா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் இருக்கிறது.

The post வரும் 23ம் தேதி தாக்கல் செய்யவுள்ள ஒன்றிய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி கிடைக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Union Government ,Union Budget ,Dinakaran ,
× RELATED மீனவர்கள் உண்ணாவிரதம் அதிமுக பங்கேற்பு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு