×

ஓபிஎஸ் ஒரு சுயநலவாதி ; விசுவாசமாக இருந்ததாக வரலாறே கிடையாது அண்ணாமலை ஒரு பச்சோந்தி துரோகத்தின் மொத்த உருவம்: எடப்பாடி பழனிசாமி கொந்தளிப்பு

அவனியாபுரம்: அண்ணாமலை ஒரு பச்சோந்தி. துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலை தான் என்று மதுரையில் எடப்பாடி பழனிசாமி ஆக்ரோஷத்துடன் தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடந்த கட்சி நிர்வாகி இல்ல விழாவில் நேற்று பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்து சென்னை செல்ல நேற்று மாலை மதுரை விமானநிலையம் வந்த எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: சமீபகாலமாக பல்வேறு கட்சித் தலைவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்ததை பொறுத்தவரை எங்கள் தலைமை முடிவு தான். ஜெயலலிதா இருக்கும்போது 5 இடைத்தேர்தல்களைப் புறக்கணித்துள்ளோம். அதிமுகவை இணைப்பதாக ஓபிஎஸ் கூறலாம். ஆனால் எங்கள் தலைமை அதற்கு உடன்படாது. பொதுக்குழு கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டோம். அவர் அதிமுகவிற்கு உண்மையாக, விசுவாசமாக இருந்ததாக வரலாறு இல்லை. ஜெயலலிதா முதன்முதலாக சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கிறபோது, போடிநாயக்கனூரில் போட்டியிடுகிறார்.

திரையுலகைச் சேர்ந்த வெண்ணிற ஆடை நிர்மலாவை எதிர்த்து போட்டியிடுகிறார். அந்த வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு சீப் ஏஜென்டாக இருந்தவர்தான் ஓபிஎஸ். அப்பொழுதே ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இல்லை. சிலருடைய சிபாரிசால்தான் அவர் உள்ளே நுழைந்தார்.
நாங்கள் ஒன்றாக இருந்தபோது பல கோரிக்கைகளை வைத்தார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சொன்னார். யாரை சுட்டிக்காட்டி சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் அதற்கு ஆணையம் வைத்து விசாரித்தோம்.

விசாரணை ஆணையம் அமைக்க என்னை நிர்பந்தப்படுத்தினார். சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் பதவி வேண்டும் என்று கேட்டார். 97 சதவீதம் பேர் அப்போது எங்களுக்கு ஆதரவாக இருந்தாலும் கூட மூத்த நிர்வாகிகளிடம் கேட்டு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தோம். 2019ல் தேனியில் அவர் மகன் போட்டியிட்டபோது, அங்கு மட்டும்தான் வேலை பார்த்தார். மற்ற தொகுதிகளில் வேலை செய்யவில்லை. கட்சியை பற்றி கவலைப்படாமல் மகனைப் பற்றி மட்டுமே கவலைப் பட்டார்.

ஒற்றை தலைமை வேண்டும் என்கிறபோது அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதற்கு அவர் ஒத்துக் கொள்ளவே இல்லை. அதன் பிறகு தான் அவர் நீதிமன்றம் சென்றார். பொதுக்குழுவை கூட்டி நடவடிக்கை எடுத்தற்காக ரவுடிகளை வைத்து கட்சியினரை தாக்கி, தலைமை அலுவலகத்தில் கதவுகளை உடைத்து, உள்ளிருந்த பொருட்களை சூறையாடி, திருடி சென்றனர். தொண்டர்கள் பலர் இவரால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்திலாவது கட்சிக்கு இணக்கமாக இருப்பார் என்று பார்த்தால், ராமநாதபுரத்தில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து, இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டார். பணத்தால் வாக்குகளை பெற்றார். இவர் எப்படி விசுவாசமாக இருப்பார்? இவர் விசுவாசமாக இருந்ததாக வரலாறு இல்லை. அவர் ஒரு சுயநலவாதி. அதிமுகவில் அவர் இணைய ஒரு சதவீதமும் வாய்ப்பில்லை.

அண்ணாமலை ஒரு பச்சோந்தி. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப பச்சோந்தி போல பேசக்கூடியவர். என்னை அவர் துரோகி என்று கூறியுள்ளார். நான் துரோகி அல்ல, துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலை தான். மோடி அருகில் அமர்ந்ததற்கே அண்ணாமலைக்கு கோபம் வருகிறது. எங்கள் தலைவர்களை கீழ்த்தரமாக, அவதூறாக விமர்சித்தால் நாங்கள் எப்படி பொறுத்துக் கொள்வோம்? எங்களை ஆளாக்கிய தலைவர்களை பற்றி பேசினால் எங்களுக்கு எப்படி உள்ளக் குமுறல் வரும்?

அண்ணாமலை கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தமில்லாதவர். நாங்கள் அவரைப் போல் அப்பாயின்ட்மென்டில் வரவில்லை. 50 ஆண்டுகளாக கட்சியில் படிப்படியாக உழைத்து, அமைச்சர், முதலமைச்சர் என்று உயர்ந்தவன் நான். நான் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். அவர் அப்படி அல்ல, அவர் நியமிக்கப்பட்டவர். இன்று இருப்பார், அடுத்த வருடம் இருப்பாரா என்று தெரியாது. கண்ணாடியில் அவர் முகத்தை பார்த்து அவரைத் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

* படிப்படியாக பூரண மதுவிலக்கு
எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ‘பிராந்தி குடித்தாலும் போதை தான். கள்ளு குடித்தாலும் போதை தான். சாராயம் குடித்தாலும் போதை தான். படிப்படியாகத்தான் மது விலக்கை அமல்படுத்தலாம். மதுவிற்கு பழக்கமானவர்கள் உடனடியாக நிறுத்த முடியாது என்பது எனக்கு வந்த தகவல். எனவே படிப்படியாக குறைத்துத்தான் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியும்’ என்றார்.

The post ஓபிஎஸ் ஒரு சுயநலவாதி ; விசுவாசமாக இருந்ததாக வரலாறே கிடையாது அண்ணாமலை ஒரு பச்சோந்தி துரோகத்தின் மொத்த உருவம்: எடப்பாடி பழனிசாமி கொந்தளிப்பு appeared first on Dinakaran.

Tags : OPS ,Annamalai ,Edappadi Palaniswami ,Avaniyapuram ,Madurai ,AIADMK ,General Secretary ,Paramakkudy, Ramanathapuram district ,
× RELATED பாஜ தலைவர் அண்ணாமலையை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்