×

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 105 முதுகலை ஆசிரியர்கள் நிரப்ப அனுமதி

சென்னை: தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில், தொகுப்பூதிய அடிப்படையில் 105 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள 105 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மாதம் ரூ.18,000 தொகுப்பூதியத்தில் நிரப்பப்படவுள்ளது. ஏற்கனவே இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, இப்பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிடும்போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்பட வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல் 2025 முடிய உள்ள மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக நியமிக்க வேண்டும். அந்தந்த ஊர்களில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதியில் உள்ள தகுதியுள்ள நபர்களை, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் மூத்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட குழு மூலமாக தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள வேண்டும்.

அந்த பணியிடத்திற்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் வரை, சம்பந்தப்பட்ட பாடப்பகுதிகள் அனைத்தும் தற்காலிக ஆசிரியரால் நடத்தி முடிக்கப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த பணிநாடுநர் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில், இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

அவர்களது பணி மற்றும் நடத்தை திருப்தி இல்லையெனில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்படுவர். தற்காலிக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு தனியாக வருகைப்பதிவேடு மற்றும் மதிப்பூதியம் வழங்கப்பட்டதற்கான பற்றொப்ப பதிவேடு பராமரிக்க வேண்டும். இந்த நியமனம் முற்றிலும் தற்காலிகம் எனவும், மாறுதல் அல்லது முறையான நியமனங்களின் மூலம் காலிப்பணியிடம் பூர்த்தி செய்யப்படும் அன்றே, தற்காலிக ஏற்பாட்டின் பேரில் பணியமர்த்தப்பட்டவர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்.

பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், அதனை இயக்குநரகத்திற்கு தெரிவித்து முன்அனுமதி பெற்ற பின்னரே, அப்பணியிடத்தினை நிரப்பிட வேண்டும். தேர்வு செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, சம்மந்தப்பட்ட மாவட்டத்திற்கு விடுவித்திட ஏதுவாக, நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களின் பெயர் பட்டியலை ஆதிதிராவிடர் நல இயக்குநரக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 105 முதுகலை ஆசிரியர்கள் நிரப்ப அனுமதி appeared first on Dinakaran.

Tags : Adi Dravidar welfare ,CHENNAI ,Adi Dravidar Welfare Schools ,Tamil Nadu ,Adi Dravidar Health Higher Secondary School ,Dinakaran ,
× RELATED ஆதிதிராவிடர் நலத்துறை நிதியில் 97.6%...