சென்னை: சென்னை ஐ.சி.எப் ஆலையில் தயாரிக்கப்பட்ட முதல் வந்தே மெட்ரோ ரயிலின் இறுதிக்கட்ட சோதனை ஓட்டம், மத்திய பிரதேச மாநிலம் கஜூராஹோவில் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் ஆலையில் வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. வந்தேபாரத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குறுகிய தூரத்துக்கு இயக்கும் வகையில், முதல் வந்தே மெட்ரோ ரயில் அண்மையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரயில்வே வாரியத்தின் உத்தரவின் பேரில், மத்திய பிரதேச மாநிலம் கஜூராஹோவில் ஆர்.டி.எஸ்.ஓ. எனப்படும் இந்திய ரயில்வேயின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரிகள், முதல் வந்தே மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கஜூராஹோவில் முதல் வந்தே மெட்ரோ ரயில் இறுதிகட்ட சோதனை நடத்தப்படுகிறது.
வந்தே மெட்ரோ ரயிலின் வேகம், சிக்னல் தொழில் நுட்பம் மற்றும் ரயில் பெட்டிகளில் உள்ள பயணிகளுக்கான பாதுகாப்பு வசதிகள் ஆகியவை குறித்து ஆர்.டி.எஸ்.ஓ.அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர். குறிப்பாக, பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்படும். அதன்பிறகு, இந்த ரயிலை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் ஒப்புதல் அளிக்கும். இதையடுத்து, முதல் வந்தே மெட்ரோ ரயில் இயக்கும் வழித்தடத்தை ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து அறிவிக்கும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post சென்னை ஐ.சி.எப் ஆலையில் தயாரிக்கப்பட்ட முதல் வந்தே மெட்ரோ ரயில் ம.பி மாநிலம் கஜூராஹோவில் இறுதிக்கட்ட சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.