×

ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை: சென்னை, கரூரில் 7 இடங்களில் சிபிசிஐடி அதிரடி, மனைவியிடமும் விசாரணை

கரூர்: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரின் சென்னை, கரூர் வீடு, அலுவலகங்கள் உட்பட 7 இடங்களில் நேற்று சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விஜயபாஸ்கரின் மனைவியிடம் ஒரு மணி நேரம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி, மகளை மிரட்டி, மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி புகார் அளித்திருந்தார்.

இதேபோல், கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல்காதர் என்பவரும், போலியான சான்றிதழ்கள் கொடுத்து நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மற்றும் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார். சார்பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், நில உரிமையாளர் பிரகாஷின் மகள் ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9ம்தேதி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல் பிரகாஷ் அளித்த புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், பிரவீன் உட்பட 6 பேர் மீது கொலை மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் பிரகாஷ் வாங்கல் பகுதியில் வசிப்பதால், இவர் கொடுத்த புகார் மட்டும் வாங்கல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 25 நாட்களுக்கும் மேல் தலைமறைவாக உள்ளார்.

அவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் கேரளா மற்றும் வடமாநிலங்களில் முகாமிட்டு விஜயபாஸ்கரை தேடி வருகின்றனர். இந்த சூழலில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 12ம்தேதி மனு தாக்கல் செய்தார். அங்கு விசாரணை 3 முறை ஒத்திவைக்கப்பட்டு, கடந்த மாதம் 25ம்தேதி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தனது தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரின் சிகிச்சையின் போது தான் உடனிருந்து கவனிக்க வேண்டும் எனக்கூறி, கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கேட்டு ஜூலை 1ம்தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் சார் பதிவாளர் அளித்த புகாரில் இடம் பெற்றுள்ள விஜயபாஸ்கரின் பெட்ரோல் பங்க்கில் பணியாற்றிய மணல்மேடு அடுத்த தாளப்பட்டியில் உள்ள யுவராஜ் வீடு, கரூர் தோட்டகுறிச்சியில் உள்ள செல்வராஜ், வேலாயுதம்பாளையம் அடுத்த கவுண்டபாளையத்தில் உள்ள ரகு மற்றும் பத்திரப்பதிவின் போது சாட்சி கையெழுத்திட்ட முனியநாதனூரை சேர்ந்த ஈஸ்வரமூத்தி ஆகியோர் வீடுகளில் 40க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து விஜயபாஸ்கரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை 7 மணி முதல் கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்ட பகுதிகளில் இருந்து 2 டிஎஸ்பிக்கள், 9 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 90க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார், பல்வேறு குழுக்களாக பிரிந்து, கரூர் பெரியாண்டாங்கோயில் என்எஸ்ஆர் நகரில் விஜயபாஸ்கர் குடியிருந்து வரும் அபார்ட்மென்ட், இதே பகுதியில் உள்ள சாயப்பட்டறை மற்றும் தறிப்பட்டறை அலுவலகங்கள், ஆதரவாளர் தீபா ராஜேந்திரன் வீடு, கரூர் கோவை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க், திருவிக சாலையில் உள்ள விஜயபாஸ்கரின் அறக்கட்டளை அலுவலகம் ஆகிய பகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் 1 மணி வரை சோதனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் மட்டும் மாலை 4 மணி வரை சோதனை நடைபெற்றது. அப்போது அவரது மனைவி விஜயலட்சுமியிடம் ஒரு மணி நேரம் சிபிசிஐடி போலீசார் துருவிதுருவி விசாரணை நடத்தினர்.  அங்கு சோதனை முடிந்த பின்னர் முக்கிய ஆவணங்கள் மற்றும் பென்டிரைவ் எடுத்து சென்றனர். மேலும், சின்னாண்டாங்கோயில் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சரின் சகோதரர் சேகரின் வீட்டுக்கு சென்ற போலீசார், வீட்டில் யாருமில்லாததால் சிறிது நேரத்தில் திரும்பி சென்றனர்.

இதேபோல, சென்னையில் அபிராமபுரம் காவல் எல்லைக்குட்பட்ட சுந்தரம் சாலையில் உள்ள சாய் கருப்பா அடுக்குமாடி குடியிருப்பின் 2வது மாடியில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீட்டில் நேற்று காலை 7.15 மணி முதல் பிற்பகல் வரை சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ரம்யா தலைமையிலான 4 போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இவ்வாறு நேற்று ஒரே நேரத்தில் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சிபிசிஐடி போலீசார் நடத்திய அதிரடி சோதனை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை: சென்னை, கரூரில் 7 இடங்களில் சிபிசிஐடி அதிரடி, மனைவியிடமும் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Former Minister of State ,Aimuga ,R. Vijayabaskar ,CBCID ,Karur, Chennai ,Karur ,Archetypal ,minister ,R Vijayabaskar ,Chennai, Karur ,Vijayabaskar ,M. R. Vijayabaskar ,Dinakaran ,
× RELATED எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு 10 நாள் நீதிமன்ற காவல்