- Brahmotsava
- அண்ணாமலை கோவில்
- தட்சிணாயன புண்ணியகால
- திருவண்ணாமலை
- ஆனிமாத பிரம்மோத்ஸவம்
- திருவண்ணாமலை அண்ணாமலை கோயில்
- தட்சிணாயன புண்ணியகாலம்
- உட்சவ மூர்த்திகள்
- பவானி
- மடா வேதி
- பிரம்மத்சவம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தட்சிணாயன புண்ணியகாலத்தை முன்னிட்டு ஆனிமாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். உற்சவ மூர்த்திகள் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில், தனிச்சிறப்புக்குரியது ஆனிமாத பிரமோற்சவ விழா. தமிழ் மாதங்களில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்ராயணம் என்றும், ஆடிமாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயனம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயணத்தை முன்னிட்டு மார்கழி மாதத்திலும், தட்சிணாயனத்தை முன்னிட்டு ஆனி மாதத்திலும் பிரம்மோற்சவம் நடைபெறும்.
அதன்படி தட்சிணாயன புண்ணியகாலத்தையொட்டி ஆனிமாத பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை நடைதிறக்கப்பட்ட அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான விநாயகர், அண்ணாமலையார் சமேத பிரியாவிடை, உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து விநாயகர், அண்ணாமலையார் சமேத பிரியாவிடை, உண்ணாமுலையம்மன் கோயில் 3ம் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்க கொடி மரம் எதிரே எழுந்தருளினர். அங்கு உற்சவ முர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடியை ஏற்றினர். அப்போது பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகர’ என பக்தி முழக்கமிட்டனர். அதைத்தொடந்து விநாயகர், அண்ணாமலையார் சமேத பிரியாவிடை, உண்ணாமலையம்மன் அலங்கார ரூபத்தில் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் மண்டபகபடி செய்தும், கற்பூர ஆரத்தி எடுத்தும் சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஆனி பிரசோற்சவ விழாவை முன்னிட்டு, வரும் 16ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் உற்சவ மூத்திகள் தினமும் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். இன்று விடுமுறை தினம் மற்றும் ஆனி பிரம்மோற்சவத்தையொட்டி கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரித்தது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மாடவீதி வரை பக்தர்களின் வரிசை நீண்டிருந்தது. இவர்கள் சுமார் 2மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
The post தட்சிணாயன புண்ணியகாலத்தையொட்டி இன்று அண்ணாமலையார் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.