குடியாத்தம், ஜூலை 7: தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள கிரானைட் குவாரி மேலாளரை துப்பாக்கி, பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டிய சித்தூரை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே தமிழக- ஆந்திர எல்லையில் கிரானைட் கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து கிரானைட் கல் இந்தியா முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் கிரானைட் குவாரி நடத்த பல்வேறு எதிர்ப்புகள் இதன் உரிமையாளருக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குவாரி மேலாளர் ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த சங்கரா சர்மா தாஜா என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குவாரியில் உள்ள அவரது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது 5க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் துப்பாக்கி மற்றும் வாள், கத்தி, கோடாரி போன்ற பயங்கர ஆயுதங்களை காண்பித்து, குவாரி உரிமையாளர் எங்கே? எனக்கேட்டு கொலை மிரட்டல் விடுத்து, அங்கிருந்து தப்பி உள்ளனர். இதுகுறித்து சங்கரா சர்மா தாஜா நேற்று கொடுத்த புகாரின்பேரில், பரதராமி போலீசார், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா மகன் பாபு பிரசாத் உள்ளிட்ட 6 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
The post துப்பாக்கி, பயங்கர ஆயுதங்களை காட்டி கிரானைட் குவாரி மேலாளருக்கு மிரட்டல் சித்தூரை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு குடியாத்தம் அருகே தமிழக- ஆந்திர எல்லையில் appeared first on Dinakaran.