- பகுஜன் சமாஜ் கட்சி
- ஜனாதிபதி
- ஆம்ஸ்ட்ராங்
- பாஜக
- ஆற்காடு சுரேஷ்
- சென்னை
- பெரம்பூர்
- ஆர்க்காடு சுரேஷ்
- அர்ஹத் சுரேஷ்
- தின மலர்
சென்னை: பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொல்லப்பட்ட விவகாரத்தில் பாஜ மண்டல தலைவர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி தீர்த்ததாக அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக, மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் வசித்து வந்தவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் (52). பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்தார். இவருக்கு பொற்கொடி என்ற மனைவியும், சாவித்திரி என்ற இரண்டரை வயது பெண் குழந்தையும் உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் வழக்கறிஞர் படிப்பு முடித்து கடந்த 2000ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கினார். 2006ம் ஆண்டு மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு பக்கம் அரசியல், வழக்கறிஞர் தொழில் என சென்று கொண்டிருந்தாலும் தொடர்ந்து, மற்றொரு பக்கம் பல்வேறு வழக்குகளில் சிக்கி விமர்சனத்திற்கும் ஆளானார்.
அதன் பிறகு வழக்குகளில் இருந்து படிப்படியாக விடுதலையானார். 2007ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்று அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதியை சென்னைக்கு அழைத்து வந்து மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் பிரபலமானார். 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தற்போதைய முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் நடந்த தேர்தல்களில் இவரது கட்சி வேட்பாளர்களை மட்டும் நிறுத்தி பிரசாரத்திற்கு மட்டும் செல்வதை ஆம்ஸ்ட்ராங் வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் மீது 6 குற்ற வழக்குகள் உள்ளன. நிலம் சம்பந்தமான பிரச்னைகள் மற்றும் சென்னையில் உள்ள சில ரவுடிகளுடன் தொடர்பு என அடிக்கடி பரபரப்பாக ஆம்ஸ்ட்ராங் பெயர் போலீசார் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டை முற்றிலும் இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டுவதற்கு பூமி பூஜை போட்டார். தற்போது கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதனால் தற்போது அவர் அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தினமும் மாலை வேளையில் பெரம்பூர் பகுதிக்கு வந்து வீட்டின் கட்டுமான பணிகள் குறித்து தனது அண்ணனிடம் கேட்டுவிட்டு அங்கு வரும் தனது பழைய நண்பர்களிடம் பேசி விட்டு செல்வது வழக்கம்.
இதேபோன்று நேற்று முன்தினம் இரவு 7.15 மணிக்கு பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கட்டுமான பணிகளை பார்த்துவிட்டு அண்ணன் வீரமணி மற்றும் அப்பகுதியில் உள்ள நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தனியார் உணவு டெலிவரி ஊழியர்கள் பயன்படுத்தும் உடையை அணிந்த நான்கு பேர் உள்ளிட்ட சுமார் 8 பேர் அவ்வழியாக வந்து ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக தலை, முகம், கால், கை உள்ளிட்ட இடங்களில் வெட்டினர். அதை தடுக்க வந்த அவரது அண்ணன் வீரமணி (65) மற்றும் பெரம்பூர் ஜீவானந்தம் தெருவில் வசித்து வரும் பாலாஜி (53), செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த அப்துல் கனி (37) ஆகியோருக்கும் சரமாரி வெட்டு விழுந்தது.
இதில் நிலைகுலைந்த ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயக்கம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறியுள்ளனர். இதனால், உறவினர்கள் கிரீம்ஸ் ரோடு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருடன் வெட்டுப்பட்ட அவரது அண்ணன் வீரமணிக்கு 27 தையல்கள் போடப்பட்டுள்ள நிலையில், பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் பாலாஜி, அப்துல் கனி ஆகியோர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து நேற்று முன்தினம் இரவு அவரது தொண்டர்கள் மருத்துவமனை மற்றும் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து, சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க், இணை கமிஷனர் அபிஷேக் தீக்சித், புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை சரி செய்தனர். மேலும் 10 தனிப்படைகள் அமைத்து தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 5 கத்திகள் மற்றும் 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சம்பவம் நடந்த தெருவில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளில் சுமார் 8 பேர் சம்பவ இடத்திற்கு வந்து அவரை வெட்டிவிட்டு ஓடும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சென்னை முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும் குறிப்பிட்ட சில நீதிபதிகளின் வீடுகளில் குற்றவாளிகள் சரணடைவார்கள் என எதிர்பார்த்து அங்கும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், திருவள்ளூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மூலம் அண்ணாநகர் துணை ஆணையர் சீனிவாசனிடம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சரணடைந்தனர்.
காட்பாடி பொன்னை கிராமத்தைச் சேர்ந்த பொன்னை பாலு (39), பெரம்பூர் பெரியசாமி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த திருமலை (45), மற்றும் மணிவண்ணன் (25), திருவேங்கடம் (33), ராமு (38), சந்தோஷ் (32), அருள் (33), செல்வராஜ் (48) ஆகிய 8 பேர் சரணடைந்தனர். இவர்களில் செல்வராஜ் என்பவர் திருநின்றவூரில் பாஜ எஸ்சி-எஸ்டி பிரிவு மண்டல தலைவர் என கூறப்படுகிறது. மேலும், பொன்னை பாலு கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் உடன்பிறந்த தம்பி. இவர் மீது இரண்டு கொலை வழக்கு உள்ளிட்ட 8 வழக்குகள் உள்ளன.
இதேபோன்று சரண் அடைந்த திருமலை என்பவர் மீதும் இரண்டு கொலை வழக்கு உள்ளிட்ட 7 குற்ற வழக்குகள் உள்ளன. இவர் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் ஏ கேட்டகிரி சரித்திர பதிவேடு ரவுடியாக உள்ளார். கடந்த 2023 ஆகஸ்ட் 18ம் தேதி பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில் ஆற்காடு சுரேஷ் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் ஒற்றைக்கண் ஜெயபால், தற்போது தீபக்பாண்டியன் கொலையில் கூலிப்படையாக செயல்பட்ட நவீன் உள்பட நெல்லை மாவட்ட கூலிப்படையைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலுக்கு ஆம்ஸ்ட்ராங் தான் நிதி உதவி செய்ததாக ஆற்காடு சுரேஷின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கருதி வந்தனர்.
மேலும், ஆற்காடு சுரேஷின் கொலையை நேரில் பார்த்த சாட்சி மாதவன் என்பவரை ராயப்பேட்டையில் கடந்த ஜனவரி 13ம் தேதி ஒரு கும்பல் கொலை செய்தது. இதனால் ஆற்காடு சுரேஷ் தரப்பு மேலும் கோபம் அடைந்தது. இதற்கு மேல் ஆம்ஸ்ட்ராங்கை விட்டு வைத்தால் நமக்கு ஆபத்து என கருதிய அவர்கள் தொடர்ந்து பல மாதங்களாக ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தான், நேற்று முன்தினம் அதிரடியாக அவரது வீட்டின் வெளியே வைத்து ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்டோர் இந்த கொலையில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் செம்பியம் போலீசார் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே, பூந்தமல்லி காவல்நிலையத்தில் நேற்று இரவு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையம் கோகுல் (25), விஜய் (19), திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டை சேர்ந்த சிவசக்தி (26) ஆகிய 3 பேர் சரண் அடைந்தனர். பிறகு செம்பியம் போலீசில் மூவரும் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று இரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் வசித்து வந்த அயனாவரம் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
* ‘குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை’
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும், பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது. ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
* இதுதான் பிரச்னையா; ஆற்காடு சுரேஷ் யார்?
வடசென்னையில் பிரபலமாக இருந்த ரவுடி சின்ன கேசவலு என்கிற சின்னா. இவர் புளியந்தோப்பை சேர்ந்த அஞ்சலை என்ற நபருடன் தொடர்பில் இருந்தார். அப்போது சின்னாவின் நண்பரான ஆற்காடு சுரேஷ் என்பவருக்கும் அஞ்சலைக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் சின்னாவிற்கும் ஆற்காடு சுரேஷுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் வைத்து சின்னாவை ஆற்காடு சுரேஷ் கொலை செய்தார். சின்னாவிற்கு எதிராக செயல்பட்ட ஜெயபால் என்பவர் அதன்பிறகு ஆற்காடு சுரேஷுடன் பழகி இருவரும் பல்வேறு கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டனர். அப்போது வடசென்னையில் ஆம்ஸ்ட்ராங் தனது ஆதரவாளர்களுடன் தனியாக நிலம் தொடர்பான கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் தனது கட்சியை பலப்படுத்த ஆம்ஸ்ட்ராங் புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்தார்.
அதில் வடசென்னை மாவட்ட செயலாளராக பிரபல ரவுடி பாம் சரவணனின் அண்ணன் தென்னரசு என்பவரை நியமித்தார். தென்னரசு ஆம்ஸ்ட்ராங்கின் வலதுகரமாக செயல்பட்டு வந்தார். அப்போது திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட இடங்களில் தென்னரசு பல்வேறு நிலம் தொடர்பான கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்தார். இது ஆற்காடு சுரேஷ் அணியினருக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியது. இதனால் தென்னரசுவை கொலை செய்ய திட்டம் தீட்டி திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே அவரை ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்டோர் சேர்ந்து வெட்டி படுகொலை செய்தனர். இதற்கு அப்போது சிறையில் இருந்த ஆற்காடு சுரேஷ் மூளையாக செயல்பட்டுள்ளார். அன்று முதல் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் ஆற்காடு சுரேஷக்கும் நேரடி பகை ஏற்பட்டது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கட்சியை சேர்ந்த அகிலன் என்ற மாவட்ட செயலாளர், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த போத்தீஸ் முரளி, ஆவடியில் பகுஜன் சமாஜ் கட்சியின் கவுன்சிலராக இருந்த முருகன் போன்ற நபர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இது ஆம்ஸ்ட்ராங்கிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. 2012, 13ம் ஆண்டுகளில் ஆம்ஸ்ட்ராங்கின் வளர்ச்சி அதிகமாக இருந்ததால் அவரது எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து இந்த கொலைகளை அரங்கேற்றி வந்தனர். மேலும், காக்களூர் பகுதியில் ஸ்கிராப் டெண்டர் எடுப்பதில் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் ஆற்காடு சுரேஷுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஆற்காடு சுரேஷை கொலை செய்ய ஆம்ஸ்ட்ராங் தரப்பினர் ஸ்கெட்ச் போட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் தப்பித்து நாக்பூர் சென்று பதுங்கி விட்டார். நாக்பூரில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு ஆற்காடு சுரேஷ் முயற்சி செய்தார். ஆனால், அது பலனளிக்கவில்லை. அதன் பிறகு இருவரும் பெரிய தாக்குதலில் ஈடுபடாமல் அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் பட்டினப்பாக்கத்தில் வைத்து சென்ற வருடம் ஆற்காடு சுரேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் நடைபெறும் போது வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்த தென்னரசுவின் அண்ணன் பாம் சரவணன் மற்றும் ஆம்ஸ்ட்ராங் அதே பகுதியில் ஒரே காரில் இருந்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதில் ஒற்றைக்கண் ஜெயபால், நவீன் உள்ளிட்ட நெல்லை கூலி படையைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு தொடர்ந்து ஆற்காடு சுரேஷ் கும்பலுக்கும் ஆம்ஸ்ட்ராங் கும்பலுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ள நிலையில் ஆற்காடு சுரேஷையே கொலை செய்து விட்டதால் இனியும் ஆம்ஸ்ட்ராங்கை விட்டு வைக்கக் கூடாது என கருதிய அவர்கள் தம்பி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்த கொலையை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
* ஓட்டலில் பேச்சுவார்த்தை?
ஆற்காடு சுரேஷ் தரப்பும் ஆம்ஸ்ட்ராங் தரப்பும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து திருமங்கலம் நோக்கி சொகுசு காரில் 17 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனியார் உணவகத்தில் வைத்து ஒரு கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். திருமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் ஆற்காடு சுரேஷை வெட்டி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ஒற்றைக்கண் ஜெயபால் மற்றும் 16 பேர் அவர்களுடன் இருப்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து மூன்று துப்பாக்கி, 14 குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் ஆம்ஸ்ட்ராங் அணியை சேர்ந்த சிலருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அப்போது வந்ததாகவும் இவர்கள் சிக்கும்போது ஆம்ஸ்ட்ராங் அணியை சேர்ந்த சில வழக்கறிஞர்கள் உள்பட 7 பேர் சிக்கியதாகவும், அவர்கள் வழக்கறிஞர்கள் என்பதால் விடுவித்துவிட்டு ரவுடி கும்பலை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், இந்த பஞ்சாயத்து எதற்காக நடந்தது என்பது குறித்து போலீசார் சரியாக விசாரிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
* பிறந்தநாளில் பழிதீர்த்த தம்பி
5.7.1978ம் ஆண்டு ஆற்காடு சுரேஷ் பிறந்த தினம்.. நேற்று முன்தினம் அவரது 46 பிறந்தநாள்…ஆற்காடு சுரேஷின் பிறந்த தினத்தில் அவரது பரம எதிரியான ஆம்ஸ்ட்ராங்கை பழிதீர்க்க நினைத்த அவரது தம்பி பாலு, நினைத்தபடியே தனது கூட்டாளிகளுடன் வந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துள்ளார் அதன் பிறகு அந்த கத்தியை கொண்டுபோய் ஆற்காடு சுரேஷ் படத்தின் முன்பு வைத்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.
* வேறு சிலருக்கும் தொடர்பு
ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆற்காடு சுரேஷின் தம்பி நேரடியாக ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டாலும், வடசென்னையை கலக்கி வந்த நாகேந்திரனுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் நாகேந்திரனின் மகன் சென்னையில் உள்ளதால், அவர்களுக்கு தொடர்பு இல்லை என்று தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, சீசிங் ராஜா, சைதை சுகு ஆகியோருக்கும் இந்தக் கொலையில் தொடர்பு இருக்கலாம். அவர்கள் தென் மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படையை அனுப்பியிருக்கலாம். அவர்கள் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்தும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
* ஆருத்ரா மோசடியில் பஞ்சாயத்து
சென்னை அமைந்தக்கரையில் ஆருத்ரா என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த நிதி நிறுவனம் ரூ.2500 கோடி மோசடியில் ஈடுபட்டது. இந்த மோசடியில் முக்கியகுற்றவாளியான ராஜசேகர், துபாயில் குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளார். பல இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில், ஆற்காடு சுரேஷ், ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் தனித்தனியாக உரிமையாளர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. அதில் இரு தரப்புக்கும் மோதல் எழுந்துள்ளது. அதில் ஒரு தரப்பினர்தான், அண்ணாமலையின் வலதுகரமாக உள்ள அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டவர்கள் பணத்தை வாங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் அவர்களிடம் விசாரணையும் நடத்தினர். ஆனால் ராஜசேகருக்குத்தான் ஆம்ஸ்ட்ராங் பழக்கம். அவரை காப்பாற்ற ஆம்ஸ்ட்ராங் முயன்றதாக கூறப்பட்டது. இந்தக் கொலையான நேரத்தில் ஆருத்ரா மோசடி குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
* தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்
பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் வைக்கப்பட்ட பள்ளி மைதானத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து, அவரது அலுவலகத்துக்கு சென்று தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அரசியல் படுகொலை நடந்து இருக்கிறது. கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் உடலை பொதுஇடத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அவரது நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இந்த கொலை வழக்கில் சரணடைந்துள்ளவர்கள் மட்டுமே உண்மையான குற்றவாளிகள் அல்ல. உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இதற்கு திட்டமிட்டு கொடுத்தவர்களையும் காவல்துறை கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் தலித்கள் மீதான தாக்குதல் நடந்து வருகிறது. தென் மாநிலங்களில் நடந்து வந்த தாக்குதல் தற்பொழுது தலைநகரத்திலேயே கூலிப்படை இவ்வாறு செய்திருக்கிறது என்றால் இது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கிறது. இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. கூலிப்படை கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் பாஜ மண்டல தலைவர் உள்பட 11 பேர் கைது: ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி தீர்த்ததாக பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.