×

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சென்னை: சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் உள்ள ஒரு பரிசு பொருட்கள் விற்பனை கடையை மையமாக வைத்து, கடந்த 2 மாதங்களில் 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கடையை நடத்தி வரும் சபீர் அலி, இலங்கையை சேர்ந்த டிரான்சிஸ்ட் பயணி, 7 கடை ஊழியர்கள் என மொத்தம் 9 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த 267 கிலோ தங்க கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பாஜ பிரமுகரும் வேதாந்தா நிறுவனத்தைச் சேர்ந்த பிருத்வீ என்பவரை இதுவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்யவில்லை. அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப் போவதாகவும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மேலும் 2 கடைகளில் சோதனை நடத்த போவதாகவும் தெரிவித்தனர். ஆனால் இதன்பிறகு எந்த விசாரணையும் நடத்தாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், 267 கிலோ தங்க கடத்தல் விவகாரம் பெரிதாகவே, சென்னை சர்வதேச விமான முனையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளின் கெடுபிடி அதிகமானதால், மேற்கண்ட அரபு நாடுகளுக்கு சென்னையில் இருந்து சுற்றுலா பயணிகள் போர்வையில் செல்லும் கடத்தல் குருவிகள் மற்றும் கொக்குகள், தங்களின் முன்பதிவு விமான டிக்கெட்டுகளை ஒட்டுமொத்தமாக ரத்து செய்துள்ளனர். பிற விமான நிலையங்களில் இருந்து இலங்கை, துபாய் உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னை விமானநிலையத்தில் 267 கிலோ தங்க கடத்தல் விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன் சென்னை விமானநிலையத்தில் சபீர் அலி துவங்கிய சிறிய அளவிலான கடையில் 7 ஊழியர்கள் தேவையில்லை என கூறப்படுகிறது. இந்த 7 ஊழியர்களும் விமானநிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வரும் வகையில் பிசிஏஎஸ் எனும் ஒன்றிய அரசின் அமைப்பான பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அமைப்பின் பாஸ்கள் வழங்கப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இந்த 7 ஊழியர்களுக்கும் பிசிஏஎஸ் பாஸ் தேவையான என எந்தவொரு பாதுகாப்பு அமைப்பும் இதுவரை ஆய்வோ, விசாரணையோ நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

பிசிஏஎஸ் பாஸ்களை வழங்குவதில் மிக கண்டிப்புடன் செயல்படும் அமைப்பு, முறையான போலீஸ் விசாரணை பாஸ் விண்ணப்பிப்பவரின் பின்னணி, செயல்பாடுகள் குறித்து விசாரணை, காவல்துறையின் தடையில்லாத அனுமதி சான்று போன்ற நடைமுறைகளை கடைப்பிடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. 267 கிலோ தங்க கடத்தல் விவகாரத்தில் வேகமாக நடந்து வந்த விசாரணையில், தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பாஜ பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அதிகாரிகள் அமைதி காப்பதாகவும் கூறப்படுகிறது.

The post பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு appeared first on Dinakaran.

Tags : BAJA ,Chennai ,Chennai Airport ,Sabir ,Bajaj Pramukar ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்