×

வேதாரண்யம் அருகே கடலில் மிதந்த இலங்கை படகு

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வாய்மேடு அருகே சிறுதலைக்காடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ராமானுஜம்(50). இவர் தனக்கு சொந்தமான படகில் நேற்று அதிகாலை 4 மணியளவில் மீன் பிடிக்க, அதே ஊரை சேர்ந்த லெட்சுமணன்(30), ராஜதுரை(28), ராமநாதன்(38), புகழ்ராஜ்(28), ராம பெருமாள்(26), ராமன்(26), பன்னாள் சக்கரம் பேட்டையை சேர்ந்த பாக்கியராஜ்(26) ஆகியோருடன் கடலுக்கு சென்றார்.

சிறுதலைக் காட்டு மீனவ கிராமத்திற்கு தெற்கே கடலில் அவர்கள் நேற்று மதியம் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது கவிழ்ந்த நிலையில் ஒரு பைபர் படகு மிதந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அந்த படகை, தங்களது படகில் கட்டி நள்ளிரவில் கரைக்கு இழுத்து வந்தனர். இதுபற்றி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்

போலீசார் படகை கைப்பற்றி சோதனை செய்ததில், அந்த படகில் டிஆர்பி-ஏ-1260 ஜெஎப்என் என்று எழுதப்பட்டுள்ளது. படகில் எழுதப்பட்ட படகு எண் மற்றும் படகின் தோற்றம் இலங்கையை சேர்ந்த படகு என தெரிய வந்தது. மேலும் இந்த படகு கரை ஓரத்தில் மீன் பிடிக்க பயன்படுத்தும் படகு என தெரிகிறது. இந்தப் படகு போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தியதா அல்லது வேறு யாரும் இலங்கையில் இருந்து தப்பி வந்தார்களா, கரையில் இருந்த போது காற்றின் வேகத்தில் இங்கு கரை ஒதுங்கியதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post வேதாரண்யம் அருகே கடலில் மிதந்த இலங்கை படகு appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,RAMANUJAM ,SRIUTALAIKADU ,WAIMEDU ,NAGAI DISTRICT ,Lechumanan ,Rajathurai ,Ramanathan ,Bugulraj ,Rama Perumal ,Raman ,
× RELATED வேதாரண்யம் அருகே விசைப்படகில் ஓட்டை விழுந்து கடலில் மூழ்கியது