*தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
காரைக்குடி : காரைக்குடியில் கஞ்சா விற்றதாக வாலிபரை கைது செய்ய சென்ற போலீசாருடன் மல்லுக்கட்டிய உறவினர்கள், தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, சேர்வார்ஊரணி பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (22). இவர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின்படி நேற்று காலை அவரது வீட்டிற்கு தனிப்படை போலீசார், அவரை விசாரணைக்கு அழைத்து வர சென்றுள்ளனர். அப்போது மனோஜ்குமாரின் தாயார் மற்றும் தங்கை, பாட்டி ஆகியோர், போலீசாரை அழைத்து செல்ல விடாமல் தடுத்துள்ளனர். அப்போது, தங்களின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்ற முயன்றுள்ளனர்.
இதனை போலீசார் தடுக்கவே அவர்களுடன் மல்லுக்கட்டிய அவர்கள் மீண்டும் உடலில் மண்ணெண்ணெயை ஊற்ற முயன்றுள்ளனர். இதனை பயன்படுத்தி மனோஜ்குமார் அங்கிருந்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிவகங்கை கலெக்டர் அலுவலகம் சென்று, அங்குள்ள வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்ட தாய், மகளை போலீசார் தண்ணீர் ஊற்றி மீட்டனர்.
இதுகுறித்து டிஎஸ்பி பிரகாஷ் கூறுகையில், ‘‘மனோஜ்குமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலின்படி எஸ்.ஐ தலைமையிலான தனிப்படையினர் விசாரிக்க சென்றனர். அப்போது, அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள் போலீசாரை மிரட்டுவதற்காக மண்ணெண்ணெயை ஊற்றி கொண்டனர். அப்போது மனோஜ்குமார் தப்பியோடி விட்டார். எஸ்.ஐ புகாரில் மனோஜ்குமார் மற்றும் அவரது தாயார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’, என்றார்.
The post கஞ்சா விற்றதாக வாலிபரை கைது செய்ய சென்ற போலீசாருடன் குடும்பத்தினர் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.