×

ஆனி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்

மண்டபம்/ வத்திராயிருப்பு : ஆனி அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம், சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் நேற்று ஆனி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ேநற்று அதிகாலை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பூஜைகள் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, ேகாயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தத்தில் புனித நீராடினர். அதன்பின்னர், ராமநாத சுவாமி, பர்வதவர்த்தனி அம்பாள் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை வழிபாடுகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் ராமேஸ்வரம் நகர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், கோயிலில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சதுரகிரியில் தரிசனம்

மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷத்திற்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதன்படி ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 4ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று அமாவாசையையொட்டி விருதுநகர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், சென்னை, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டில் குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது.

பக்தர்களின் உடைமைகளை வனத்துறை ஊழியர்கள் சோதனை செய்து கோயிலுக்குச் செல்ல அனுமதித்தனர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அமாவாசையையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர், நிர்வாகி அதிகாரி ஆகியோர் செய்திருந்தனர். சுவாமி தரிசனம் செய்ய கடைசி நாள் என்பதால் இன்றும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஆனி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : RAMESWARAM ,CHADURAGIRI ,NEW MOON ,Vathirairippa ,Rameshwaram ,Ani Amavasa ,Rameswaram Ramanathasamy Temple ,Ani New Moon ,Agni ,Triththa ,Ani ,Amavasa ,
× RELATED மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்